பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி மேக்ரான், நாட்டில் மதச்சார்பின்மையை வலுப்படுத்தும் நோக்கில் வரைவு சட்டம் ஒன்று இந்த ஆண்டு திசம்பரில் வெளியிடப்படும் என கூறியுள்ளார்.
அந்நாட்டின் குடியரசு கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மேக்ரான் மீதும் கட்சியின் மீதும், மதச்சார்பற்ற விழுமியங்கள் மீது மதச் சட்டங்களை ஆதரிப்பதாக எழுந்த குற்றச்சாட்டினைத் தொடர்ந்து அவர் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.
இந்த உரையில், இஸ்லாம் மதம் “இன்று உலகம் முழுவதும் நெருக்கடியில் இருக்கும் ஒரு மதம்” என்றும், இந்த நெருக்கடியானது அம்மதத்தின் தீவிரமான நிலைப்பாடுகளால் ஏற்பட்டது என்றும், எனவே நாட்டில் மதசார்பின்மையை வலுப்படுத்தும் நோக்கில் வரைவு சட்டம் ஒன்று இந்த ஆண்டு திசம்பரில் வெளியிடப்படும் எனக் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, இஸ்லாம் பிடியிலிருந்து நாடு விடுபட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வரும் நாட்களில் வரவிருக்கும் வரைவு சட்டமானது மதத்தின் மீது பிரான்ஸின் நடுநிலைமையைக் கட்டாயப்படுத்திய 1905-ம் ஆண்டு சட்டக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சுகாதார காரணங்களுக்கிடையில் தற்போது வீட்டிலிருந்து கல்வி கற்கும் மாணவர்கள் விரைவில் பள்ளிக்கு மற்ற மாணவர்களுடன் இணைந்து செல்ல வேண்டும் என்றும் மக்ரோன் கூறியுள்ளார். மேலும், மாணவ/இளைஞர்களிடையே மதசார்ப்பின்மையை வளர்ப்பதில் பள்ளிகளின் முக்கியத்துவத்தினையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக மதத்தின் பெயரால் சிலர் நம்மை பிரிக்க முயற்சிக்கின்றனர் என அவர் கடந்த பெப்ரவரி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.