போடி: சென்னை, ஈரோடு, திருப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள், சுற்றுலாப்பயணிகள், குழந்தைகள் என 36 பேர் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் பற்றி எரியும் பயங்கர காட்டுத்தீயில் சிக்கி கொண்டனர். இவர்களில் குழந்தைகள், பெண்கள் உள்பட 11 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். காட்டுக்குள் சிக்கியவர்களில் 8 பெண்கள் தீயில் கருகி உயிரிழந்தனர்.தேனியில் இருந்து மூணாறு வழித்தட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் வடக்குமலை, அகமலை, மரக்காமலை, வடமலையாச்சியம்மன் கோயில், ஊத்தாம்பாறை, குடமுருட்டி, பிச்சாங்கரை, அடகுபாறை, காரிப்பட்டி, கொட்டக்குடி, குரங்கணி, போடிமெட்டு, இலங்காவரிசை, உரல்மெத்து, முட்டம், மேல்முட்டம், கீழ்முட்டம், சென்ட்ரல், அத்தியூத்து, சின்னமுடக்கு உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன.
வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இம்மலைப் பகுதியில் ஏராளமான வன விலங்குகள், தேக்கு, சந்தனம் உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்கள் உள்ளன. தமிழக, கேரளாவை இணைக்கும் வகையில் உள்ள இந்த வழித்தட பகுதிகளில் ஆண்டிற்கு 8 மாதங்கள் வரை மழை பெய்வதால் தட்பவெப்ப நிலை ரம்யமாக இருக்கும். அதேநேரத்தில் கோடைக்காலம் துவங்கி விட்டால் மலைப்பகுதியில் மரங்கள், புற்கள் காய்ந்து காட்டுத்தீ பற்றி எரிய துவங்கி விடுகிறது. தற்போது கோடை வெயில் காரணமாக, போடிமெட்டு அருகே அகமலை, மராக்காமலை, குரங்கணி பகுதிகளில் உள்ள காடுகளில் கடந்த 20 நாட்களாக இரவு, பகலாக காட்டுத்தீ பரவி வந்தது. வனத்துறையினர் அவ்வப்போது அணைப்பதும், மீண்டும் காட்டுத்தீ பற்றி எரிவதுமாக இருக்கிறது.
இந்நிலையில் சனி, ஞாயிறு விடுமுறையையொட்டி சென்னை, ஈரோடு, திருப்பூரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ஐடி ஊழியர்கள், கல்லூரி மாணவிகள், மலையேற்றப் பயிற்சியாளர்கள், தங்கள் குடும்பத்துடன் 36 பேர் போடி அருகேயுள்ள குரங்கணிக்கு நேற்று முன்தினம் இரவு வந்தனர்.
இவர்கள் நேற்று காலை கேரள மாநிலம், மூணாறு சென்றனர். மாலையில் அங்கிருந்து கொழுக்குமலை வழியாக குரங்கணிக்கு அடர்ந்த வனப்பகுதி வழியாக கீழிறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வழியில், திடீரென பயங்கர காட்டுத்தீ பற்றியது. காட்டுத்தீக்குள் சிக்கிக் கொண்ட இவர்கள், அதில் இருந்து தப்ப வழி தெரியாமல் வனத்திற்குள் அங்குமிங்கும் சிதறி ஓடினர்.
காட்டுத்தீயில் இவர்கள் சிக்கிக் கொண்ட தகவலை அறிந்த கொழுக்குமலையை சேர்ந்த பெண் ஒருவர் குரங்கணி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து குரங்கணி போலீசார், போடி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் காற்று பலமாக வீசியதால் வனத்திற்குள் தீ வேகமாக பரவியது. தீவிபத்து நடந்த பகுதி, மலையடிவாரத்தில் இருந்து 9 கிமீ தூரத்தில் இருப்பதாலும், சாலை வசதி இல்லாததாலும் உடனடியாக
வாகனங்களில் சென்று மீட்க முடியவில்லை. காட்டுக்குள் பற்றி எரிந்த தீயின் ஜூவாலைகள், அங்கிருந்த கோரைப்புற்களில் பற்றி விறுவிறுவென பரவியது. இதனால் அதில் சிக்கிக் கொண்டவர்களால் அங்கிருந்து தப்பி வரமுடியாத சூழ்நிைல ஏற்பட்டது. தகவலறிந்ததும் தேனி, கம்பம், பெரியகுளம், ஆண்டிபட்டி பகுதிகளில் இருந்து ஏராளமான தீயணைப்பு வாகனங்கள், 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மலையடிவாரமான
குரங்கணிக்கு விரைந்தன. அருகிலுள்ள மலைக்கிராம மக்களும் கொழுக்குமலை பகுதிக்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். தேனி மாவட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். கோவை, சூலூரில் இருந்து 2 ஹெலிகாப்டர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தன.
தேனி கலெக்டர் பல்லவி பல்தேவ், எஸ்பி பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட தீயணைப்பு படை அலுவலர் மணிகண்டன் ஆகியோரும் விரைந்து தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை முடுக்கி விட்டனர்.
காட்டுத்தீயில் சிக்கிய திருப்பூர் பூம்புகார் நகரை சேர்ந்த அங்கமுத்து மகன் ராஜசேகர் (23), திருப்பூரை சேர்ந்த சரவணன் மகள் பாவனா (24), ஈரோடு செந்தில்குமார் மகள் நேகா (9), திருப்பூரை சேர்ந்த சரவணன் மகள் சாதனா (11), சென்னை தனபால் மகள் மோனிஷா (30), சென்னை வேளச்சேரி பியூஷ் மனைவி பூஜா (27), சென்னை குரோம்பேட்டை கல்யாணராமன் மகள் சகானா (20), சென்னை ஐடி ஊழியர் ஷ்ரதா உட்பட 10 பேரை டோலி மூலம் காயங்களுடன் மீட்டனர்.
அவர்களுக்கு போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீயில் சிக்கிய அதிர்ச்சியில் இருந்து அவர்கள் மீளமுடியாத நிலையில் உள்ளனர். கலெக்டர் பல்லவி பல்தேவ் நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறினார். தீயில் சிக்கியிருப்பவர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் தீயணைப்புத்துறையினரும், போலீசாரும் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் அதிகாலை 12 மணியளவில் சென்னையைச் சேர்ந்த அனுவித்யா (25) என்பவரை உடல் முழுவதும் பலத்த தீக்காயங்களுடன் வனத்துறையினர் மற்றும் மக்கள் மீட்டுள்ளனர். அவரையும் சேர்த்து 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.இன்னும் எஞ்சிய 25 பேரை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதில் 8 பெண்கள் உடல் கருகிய நிலையில் இறந்து கிடப்பதாக மீட்புப்பணிக்கு சென்று திரும்பிய ராணுவ வீரர் பாக்கியராஜ் நள்ளிரவில் நிருபர்களிடம் தெரிவித்தார். தீயணைப்பு துறை வீரர்கள் சில சடலங்களை பார்த்ததாக தெரிவித்தனர்.
காட்டுத்தீ கொளுந்து விட்டு எரிவதால் தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மதுரை தீயணைப்புத்துறை துணை இயக்குநர் சரவணக்குமார் தலைமையில் 25 பேர் கொண்ட வீரர்கள் இரவு 9 மணியளவில் குரங்கணிக்கு புறப்பட்டுச்சென்றனர்.இந்நிலையில், 10 கமாண்டோக்கள் கொண்ட ராணுவ மீட்புக்குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் போடி குரங்கணி மலைப் பகுதிக்குச் சென்று தீப்பற்றி எரியும் பகுதியைச் சுற்றி பார்வையிட்டு நிலைமையைக் கண்காணித்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நள்ளிரவில் 12 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையத்துக்குச் சென்றனர். அதிகாலையில் மீட்புப்பணியில் மீண்டும் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப