பிரித்தானியாவில் வேகமாக பரவிவரும் புதிய கொரோனா வைரஸ் காரணமாக, அதன் மீதான போக்குவரத்து தடையை தொடர்வதா நீக்குவதா என்பது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள் இன்று காலை கூடி பேச்சுவார்த்தை நடத்தினர்.
பிரித்தானியா மீதான 48 மணி நேர பயணத்தடை இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வரும் நிலையில், பிரித்தானியா மீது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பாக உறுப்பு நாடுகள் கூடி பேச்சுவார்த்தை நடத்தின.
ஐரோப்பிய ஒன்றிய தூதரக அலுவலர் ஒருவர் கூறும்போது, எல்லைகளை ஒரு ஒருங்கிணைந்த முறையில் திறப்பது தங்கள் இலக்கு என்று கூறினார்.
அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பாக எங்களுக்கு சில நல்ல திட்டங்கள் உள்ளன, ஆனால், அவற்றைக் குறித்து நாங்கள் எங்கள் ஐரோப்பிய கூட்டாளிகளுடன் கலந்தாலோசிக்கவேண்டியுள்ளது என்கிறார் பிரான்ஸைச் சேர்ந்த அரசு அலுவலர் ஒருவர்.
பிரித்தானியாவில் புதுவகை அதிவேகமாக பரவும் கொரோனா வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரான்ஸ் பிரித்தானியாவுடனான அனைத்து வகை போக்குவரத்தையும் தடை செய்துவிட்டது.
இதனால், ஆங்கிலக் கால்வாயின் இரு பக்கங்களிலும் வெகு தூரத்துக்கு லொறிகள் வரியாக காத்து நிற்கவேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து, பிரான்ஸ் போக்குவரத்துத்துறை அமைச்சரான Jean-Baptiste Djebbari, இன்னும் சில மணி நேரத்தில், பிரித்தானியாவிலிருந்து போக்குவரத்து மீண்டும் தொடரும் வகையில் ஐரோப்பிய பக்கத்தில் நாங்கள் மருத்துவ கொள்கை ஒன்றை பயன்பாட்டுக்கு கொண்டுவர இருக்கிறோம் என்று கூறியிருந்தார்.
அத்துடன், பிரித்தானியாவிலிருக்கும் பிரெஞ்சுக் குடிமக்கள் பிரான்சுக்கு வருவதற்கு ஆயத்தமாகும் வகையில், கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு பிரான்ஸ் கூறியிருந்தது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்காக தத்தம் நாடுகளுக்கு திரும்ப விரும்பும் பிரான்ஸ் நாட்டவர்களும் பிரித்தானியர்களுக்கும் இந்த தற்காலிக தடை பெரும் தடையாக அமைந்ததை கண்கூடாகவே உலகம் கண்டதை மறுக்கமுடியாது.