இந்தியாவில் டெல்லி அரசாங்கம் வீடு வீடாக சென்று, பிரித்தானியாவிலிருந்து திரும்பிய நபர்களை கோவிட் -19 சோதனை நடத்திவருகிறது. அதில், இதுவரை 8 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நவம்பர் 25 முதல் டிசம்பர் 21 வரை பிரித்தானியாவிலிருந்து இருந்து இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய 13,000-க்கும் மேற்பட்டவர்களில் மொத்தம் 19 பயணிகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
11 பேர் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையிலேயே நேர்மறையாக சோதிக்கப்பட்டனர். மேலும் 8 பேர் வீடு வீடாக நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தின் போது கண்டறியப்பட்டனர் என்று டெல்லி அரசாங்கத்தின் உயர் வட்டாரம் தெரிவித்துள்ளது.
அனைத்து 19 நேர்மறை நோயாளிகளும் எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வசதிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர், அங்கு அவர்கள் , சமீபத்தில் பிரித்தானியாவில் பதிவாகியுள்ள (70 சதவீதம் வேகமாக பரவக்கூடிய) புதிய வகைக் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை அறிய மரபணு சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களில் பிரித்தானியாவிலிருந்து இருந்து டெல்லிக்குச் சென்ற அனைவரையும் கண்டுபிடித்து சோதனை செய்வது உறுதி செய்யப்படும் என்று டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் புதன்கிழமை தெரிவித்தார்.