உலகளாவிய ரீதியாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் எட்டு நகரங்களில் இரவு நேர ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளன.ஐரோப்பிய நாடுகளில் அதிக பாதிப்பை பிரான்ஸ் எதிர் கொண்டுள்ளதன் காரணமாக இந்த ஊரடங்கு சட்டம் விதிக்கப்பட்டுள்ளது.பிரான்சில் உள்ள மருத்துவமனைகளில் பெரும் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக பிரான்சின் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு மாதகாலமாக பிரான்ஸ் முடக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே தாம் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து வருவதாக விருந்தக உரிமையாளர்கள் முறையிட்டுள்ளனர்.இந்த நிலையில், இரவு நேர ஊரடங்கு தமது வர்த்தக நடவடிக்கைகளை மேலும் பாதிக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.ஊரடங்கு சட்டம் காரணமாக பலர் தமது வேலைகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.கடந்த வெள்ளிக்கிழமை வரை புதிதாக தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 86 ஆக இருந்த நிலையில், நேற்று அந்த தொகை 32 ஆயிரத்து 427 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.அதேவேளை, தொற்றினால் பாதிப்படைந்துள்ள பிறிதொரு நாடான இத்தாலியில் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில், இன்று இத்தாலிய பிரதமர் கியுசெப்பி கொன்டே புதிய விதி முறைகளை அறிவிக்கவுள்ளார்.
அதேபோல சுலோவாக்கியாவில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், 10 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கட்டாய பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக பிரதமர் ஐகோர் மற்றோவிக் தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸ் தொற்று ஜேமனியிலும் அதிகரித்து வருவதனை அடுத்து மக்களை தமது வீடுகளில் இருக்கும் படி ஜேமன் சான்சலர் அன்கெலா மேர்கல் வலியுறுத்தியுள்ளார்.ஸ்பெயினில், கடந்த ஜூலை மாதம் முதல் இன்று வரை 11 ஆயிரம் பேர் தொற்று காரணமாக மரணித்துள்ளனர்.இது தவிர, ஐரோப்பிய நாடுகளில் போலந்து, போர்த்துக்கல், நெதலாந்து மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளும் தொற்றினால் பெரும் பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.