பிரான்சில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், மூன்றாவது தேசிய ஊரடங்கும் நிராகரிக்கப்பட்டதால், முக்கிய நகரங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்சில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை, சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரன் ஒப்புக் கொண்டுள்ளார். எதிர்வரும் நாட்களில் கடுமையான கட்டுப்பாடுகள் அமுலுக்கு கொண்டுவரப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நைஸில் உள்ள ஒரு சுகாதார மையத்திற்கு விஜயம் செய்தபோது, கூறிய அவர், பிரான்சில் ஒரு சில நகரங்கள் மற்றும் பகுதிகளில் கொரோனா பரவல் மற்ற இடங்களை விட மிக விரைவாக உள்ளது, இதற்கு பிராந்திய ஊரடங்கு நடவடிக்கைகள் தேவைப்படலாம் என்றார்.
இதனிடையே, நைஸ் நல்ல மேயர் கிறிஸ்டியன் எஸ்ட்ரோசி தெரிவிக்கையில், தளர்வுடன் கூடிய ஊரடங்கை அமுலுக்கு கொண்டுவர வேண்டும் என்று அரசாங்கம் முடிவு செய்தால், உதாரணமாக ஒவ்வொரு வார இறுதியிலும், நான் அதை ஆதரித்து ஊக்குவிப்பேன் என்றார்.
பிரான்சில் வெள்ளிக்கிழமை மட்டும் 24,116 பேர்களுக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது,
இது முந்தைய வாரத்தில் இருந்து கிட்டத்தட்ட 4,000 அதிகமாகும். இந்த நிலையில், மூன்றாவது தேசிய ஊரடங்கை அடுத்த 12 மாதங்களில் அமுலுக்கு கொண்டுவர வேண்டாம் என ஜனாதிபதி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால், இரவு 8 மணியில் இருந்து அமுலில் இருந்த தேசிய ஊரடங்கானது, ஜனவரி நடுப்பகுதியில் இருந்து மாலை 6 மணியில் இருந்து என மாற்றியமைக்கப்பட்டது.