பிரான்சில் பயணச்சான்றிதழ் ஒன்றை சோதனையிட்ட பொலிசார் அதில் இருந்த தகவல்களைக் கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவை, வேலை போன்றவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியில் வர வேண்டும்.
அதற்கும் அவர்கள் உரிய சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இதே போன்று தான் பிரான்சிலும் உள்ளது.
இந்நிலையில், Lannion (Côtes d’Armor) நகரில் கடந்த வெள்ளிக் கிழமை வீதி கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிசார், அப்போது 39 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கார் ஒன்றின் பின்னால் ஒளிந்திருப்பதைக் கண்டுள்ளனர்.
இதையடுத்து பொலிசார் அவரை நெருங்கி சென்று, வெளியில் செல்வதற்கான அனுமதி பத்திரம் உங்களிடம் உள்ளதா? என்று கேட்டுள்ளனர்.
உடனே அவர் தன்னுடைய பயணச்சான்றிதழுக்கான அனுமதி பத்திரத்தை நீட்டியுள்ளார். அந்த அனுமதி பத்திரத்தில், அவர் சொல்லியிருந்த காரணம் பொலிசாருக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
ஏனெனில், அனுமதி பத்திரத்தில் வெளியில் செல்வதற்குரிய காரணம் பகுதியில் ஒருவரை தாக்குவதற்கு செல்கின்றேன் என எழுதியிருந்தார். இதை வாசித்த பொலிசார் ஒருநிமிடம் அதிர்ச்சியடைந்தனர்.
அனுமதி பத்திரத்தில் உண்மையான பெயர், முகவரி மற்றும் வீட்டில் இருந்து புறப்பட்ட நேரம் அனைத்தும் சரியாக எழுதப்பட்டிருந்தது.
மேற்கொண்டு அவரை விசாரித்ததில், அவர் அனுமதி பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள காரணம் உண்மை எனவும், அவ்வழியாக வர உள்ள ஒருவரை தாக்குவதற்காகவே அங்கு காத்திருப்பதையும் பொலிசார் உறுதி செய்தனர்.
அவரிடம் மடித்து வைக்கக்கூடிய கத்தி மற்றும் அவர் மது அருந்தியிருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் பொலிசார் அவரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு, அதன் பின் அவருக்கு 135 யூரோ அபராதம் விதித்து அனுப்பியுள்ளனர்.
தற்போது அவர் விடுவிக்கப்பட்டிருந்தாலும், விரைவில் மீண்டும் அவர் விசாரணைக்காக அழைக்கப்படுவார் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.