பிரான்சில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் முதற்கட்ட கொரோனாத் தடுப்பூசிகள் வெளிவரும் என்றும், முதற்கட்ட விநியோகம் நடைபெறும் என்றும், ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் தனது செவ்வியில் தெரிவித்திருந்தார்.
இந்த முதற்கட்டத் தடுப்பூசிகள் யாரிற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வழங்கப்படும் என பிரான்சின் அதியுயர் சுகாதார ஆணையமான HAS (Haute Autorité de santé) அறிவித்துள்ளது.
இந்த முதற்கட்டக் கொரோனத் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றதும், கொரேனாவுடனான எதிர்ப்புப் போராட்டத்தின் முன்னணியில் நிற்கும், வைத்தியர்கள், மருத்துவத் தாதிகள், மருத்துவ உதவியாளர்கள் என மருத்துவத் துறையினர்க்கு முதலாவதாக வழங்கச் சிபாரிசு செய்யப்படும்.
அடுத்து வயதானவர்களிற்கும், இலகுவாகக் கொரோனா தொற்றக்கூடிய, வேறு தீவிர நோயுள்ளவர்களிற்கும், நீண்டகால நோய்கள் உள்ளவர்களிற்கும் (maladies chroniques), உதாரணத்திற்கு, இருதய நோய்கள், நீரிழிவு நோய், புற்று நோய், அஸ்துமா, சுவாசப்பை, சிறுநீரகம் போன்றவற்றில் பாதிப்புள்ளவர்கள் போன்றவர்களிற்கும், இந்தத் தடுப்பூசிக்கான முன்னுரிமை வழங்கப்படும் எனவும் பிரான்சின் அதியுயர் சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் இந்தக் கொரோனாத் தடுப்பூசி போடுவது சட்டப்படி கட்டாயமாக்கப்படவில்லை எனவும், சிபாரிசு மட்டும் செய்யப்படும் எனவும், இந்தத் தடுப்பூசிகள் இலவசமானவை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.