உடல் உறுப்புகளில் இதயத்துக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்தது மனித மூளை, ஆளுமைக்கும், அறிவாற்றலுக்கும் மையமாக திகழ்கிறது.
அதில் பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக்கள், செல்கள் உள்ளன. ஒவ்வொரு செல்லையும், சிறிய மணல் துகள் அளவுக்கு பெரிதாக்கினால் நமது மூளையில் உள்ள செல்களை நிரப்ப ஒரு லாரி போதாது.
இந்த செல்களில் ஆயிரம் கோடி நியூட்ரான்கள், நரம்பு செல்கள் உள்ளன. இவற்றுக்கு இடையே ஓய்வில்லாத மின் ரசாயன நடனம் தான், நமது சிந்தனை.
மனிதன் உயிர் வாழும் வரை இந்த செல்களிடையே மின் துடிப்புகள் இருந்து கொண்டே இருக்கின்றன.
எப்போதும் விழிப்பாக
60 சதவிகிதம் கொழுப்பால் ஆன மூளை வலியை உணராது, ஏனெனில் வலியை உணறும் வலி வாங்கிகள் மூளையில் இல்லை, எனவே தான் மண்டையோட்டை கழற்றிவிட்டு மருத்துவர்கள் நாம் விழிப்பில் இருக்கும்போது அறுவை சிகிச்சை செய்கிறார்கள், அப்போது தான் மூளையின் அறிவாற்றல் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும்.
பொருட்களை சரியாக கணிக்க
பொருட்களை சரியாக கணிக்க மூளை தான் உதவுகிறது, பொதுவாக நமது கண்கள் பொருட்களை தலைகீழாகத்தான் பதிவு செய்யும், இதனை நேராக்கி இயல்பாக்குவது மூளை தான், மேலும் நமது மூளை 25 வாட்ஸ் அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது, அதாவது மின்சார பல்பை எரிய வைக்கும் அளவுக்கு இந்த மின்சாரம் இருக்குமாம்.
அறிவாற்றலுடன் தொடர்பா?
மூளையின் அளவு பெரிதாக இருந்தால் அறிவாற்றலும் அதிகமாக இருக்கும் என்ற நம்பிக்கை பலரிடம் இருக்கிறது. ஆனால் அது உண்மையில்லை. மூளையின் அளவுக்கும் புத்திக்கூர்மைக்கும் தொடர்பு இருப்பதாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
நாம் தொடர்ச்சியாக சிந்தித்துக் கொண்டிருக்கிறோம், ஒரு நாளைக்கு 70 ஆயிரம் விஷயங்களை நாம் சிந்திக்கிறோம் என்கிறார்கள், நமது மூளை மணிக்கு 418 கிலோமீட்டர் வேகத்தில் தகவல்களை பரிமாறுவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
மூளை வளருமா?
மனித மூளை எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. பிறக்கும்போது இருக்கும் அளவை விட பருவ வயதில் மூன்று மடங்கு அதிகமாகிறது.
இளமை முடிந்து தலை நரைக்கும்போது, மூளையின் எடையும் குறையத் தொடங்கி, வருடத்திற்கு ஒரு கிராம் என்ற அளவில் குறைந்து கொண்டே வருகிறது.
இதுவரை அதிக எடை கொண்ட மனித மூளை 2 கிலோ 49 கிராம் என்ற அளவில் இருந்தது. சராசரி மனிதனின் மூளை ஒரு கிலோ 349 கிராம் என்ற அளவிலே இருக்கும்.
ஒரே நேரத்தில் பல வேலைகள்
மூளை தனது செயல்பாடுகளுக்காக வினாடிக்கு 1 லட்சம் ரசாயன விளைவுகளை சந்திக்கிறது. பொருள்களை சிந்திப்பது, பொருள்களை நினைவுபடுத்துவது, கம்ப்யூட்டரில் டைப் செய்வது என்று மூளை பல வேலைகளை ஒரேசமயத்தில் செய்கிறது.
நமது 40 வயதுகளில் இருக்கும் சமயத்திலும், நமது மூளை தன்னை மேம்படுத்திக் கொண்டே இருக்கிறது. புதியவற்றைக் கற்கும்போதும் அவற்றை நமது மூளை ஏற்று பதிவு செய்கிறது.
அதுமட்டுமின்றி ஒருவருடைய வாழ்நாளில் அவருடைய மூளை ஆயிரம் லட்சம் கோடி தகவல்களை சேமித்து வைக்கிறது. இந்த தகவல்களின் எடை ஒரு டன் இருக்கும்.
வளர்ச்சியை நிறுத்தும் மூளையின் அணுக்கள்
தவழும்போது மூளையின் அணுக்கள் வளர்ச்சியை நிறுத்துகின்றன. அதன்பிறகு அணுக்கள் வளர்வதே இல்லை. அதன்பிறகு ஒன்று அணுக்களின் எண்ணிக்கை குறையும் அல்லது நிலையாக இருக்கும்.
இதேபோல் கர்ப்ப காலத்தில் பெண்களின் மூளையின் அளவு சற்று சரியும். இது உண்மை. குழந்தையை பிரசவித்த ஆறு மாதங்கள் கழித்தே அந்த பெண்ணின் மூளை பழைய அளவுக்கு மாறும்.
புத்திசாலித்தனத்தை தீர்மானிப்பது எது?
மூளையின் அடர்த்தி, அதில் உள்ள மடிப்புகள், பாலம் பாலமாக கசங்கி போய் இருப்பதுதான் புத்திசாலித்தனத்தை தீர்மானிக்கிறது.
மூளை, முதுகுதண்டில் இருந்து முளைக்கிறது. முட்டைக்கோஸ் அல்லது வெங்காயம் போலத்தான் தோல் அடுக்குகளாக மூளை வளர்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக கடைசி அடுக்காக போர்வை போல் மூளையை போர்த்தி இருக்கும் பகுதியை ‘கார்டெக்ஸ்’ என்று மருத்துவர்கள் அழைக்கிறார்கள்.