சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளன. இதனால் ஏற்படும் வாகன நெரிசலில் சென்னை வாசிகள் தத்தளிக்கின்றனர்.
நிவர், புரெவி என அடுத்தடுத்த புயல்களை சந்தித்த சென்னைவாசிகள், தொடர் மழையால் சேதமடைந்து, குண்டும் குழியுமாக உள்ள சாலைகளுக்கு நடுவே சுழன்று ஓடிக்கொண்டிருக்கின்றனர். சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 51 பேருந்து சாலைகள் மழையால் தேசமடைந்துள்ளதாக மாநகராட்சி கண்டறிந்துள்ளது. மொத்தமுள்ள 39,000 உட்புற சாலைகளில் 4,000க்கும் அதிகமாக சாலைகள் தேசமடைந்து குண்டும் குழியுமாக உள்ளன. இதனால் மாநகர் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பல இடங்களில், 2 வாரத்திற்கும் மேலாக, மழைநீர் முழுவதுமாக வடியாமலும், குண்டும் குழியுமாகவும் இருக்கின்றன. இதனால், சில சாலைகளை பயன்படுத்தவே இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஓட்டேரி பிரதான சாலை, அண்ணா பிரதான சாலை, அருணாச்சலம் சாலை, ராஜமன்னார் சாலை உள்ளிட்டவை மிகவும் மோசமடைந்துள்ளன. சாலையில் தேங்கியுள்ள மழைநீரால், பள்ளங்கள் இருப்பது தெரியாமல் பலர் வாகனத்திலிருந்து தவறி விழுந்து விபத்துக்கள் ஏற்படுவதாகவும் கே.கே.நகர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
வடசென்னை, அண்ணா நகர், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளும் மோசமான நிலையில் உள்ளன. இதனால் வாகனங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்து செல்கின்றன. கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், குறித்த நேரத்திற்கு அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
முகவரி இல்லாத தெருக்களை கூட சரியாக கண்டுபிடித்து பயணிகளை கொண்டு போய் சேர்க்கும் ஆட்டோக்கள், பல தெருக்களில் நுழையவே முடியாத நிலை உள்ளது. பல்வேறு தெருக்கள் பள்ளம், மேடாக காணப்படுவதால், ஆட்டோக்கள் அடிக்கடி பழுதாகி நிற்பதாக ஆட்டோ ஓட்டுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தொடர் மழையால் சாலைகள் சேதமடைவது எதார்த்தமான நிகழ்வு என்றாலும், அவற்றை விரைவாக சரிசெய்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்