இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரை இழந்தாலும் தோழர் நடராஜனுக்காக சந்தோஷமடைகிறேன் என டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்க்த்தில் பதிவிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. டி20 தொடரை இந்திய அணி வென்றதற்கு நடராஜனின் பந்துவீச்சு முக்கிய காரணமாக அமைந்தது. டி20 தொடரின் தொடர் நாயகனாக ஹர்டிக் பாண்டியா தேர்வு செய்ய பெற்ற போதும் இந்த பெருமைக்கு சொந்தக்காரர் நடராஜன் என்று தெரிவித்தார் பாண்டியா.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அனைவரது கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்துள்ள நடராஜனுக்கு டேவிட் வார்னர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில், “வெற்றி தோல்வி என எதுவாக இருந்தாலும் களத்திற்கு வெளியே நாங்கள் அனைவரையும் மதிக்கிறோம்.
தொடரை நாங்கள் இழந்தாலும் நடராஜனை நினைத்து என்னால் சந்தோஷப்படமால் இருக்க முடியாது. மிகவும் இனிமையானவர், ஆட்டத்தை நேசிக்கக்கூடியவர். வலைப்பயிற்சிக்காக வந்த ஒரு வீரர் இந்திய அணியில் ஒரு நாள் மற்றும் டி20 போட்டியில் விளையாடியது மிகப்பெரிய சாதனை தோழா“ என்று வாழத்தி உள்ளார்.
ஐ.பி.எல் 2020 தொடரில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியில் விளையாடிய நடராஜன் 16 போட்டிகளில் 16 விக்கெட்களை வீழ்த்தினார். இந்திய அணிக்காக நடராஜன் தேர்வான போதே ஆஸ்திரேலியாவில் சந்திப்போம் என்று அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.