தென்ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் டர்பனில் நேற்று முன்தினம் (கடந்த 1-ந்தேதி) தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா வார்னர், ஸ்மித் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோரின் அரைசதங்களால் 351 ரன்கள் குவித்தது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் மகாராஜ் 5 விக்கெட்டும், பிலாண்டர் 3 விக்கெட்டும், ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஸ்டார்க் மற்றும் நாதன் லயன் ஆகியோரின் அபார பந்து வீச்சால் 162 ரன்னில் சுருண்டது. டி வில்லியர்ஸ் மட்டும் தாக்குப்பிடித்து 71 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். தென்ஆப்பிரிக்கா ஒரு கட்டத்தில் 5 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்திருந்தது.
அதன்பின் 12 ரன்னுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து பரிதாபத்திற்குள்ளானது. ஸ்டார்க் 10.4 ஓவரில் 34 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் சாய்த்தார். நாதன் லயன் 3 விக்கெட் வீழ்த்தினார். தென்ஆப்பிரிக்கா ஆல்அவுட் ஆனதுடன் நேற்றைய 2-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. 189 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக பான்கிராப்ட், வார்னர் களம் இறங்கினார்கள். வார்னர் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கவாஜா 6 ரன்னிலும், கேப்டன் ஸ்மித் 38 ரன்னிலும், ஷேன் மார்ஷ் 33 ரன்னிலும், மிட்செல் மார்ஷ் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர் பான்கிராப்ட் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
முதல் இன்னிங்சில் 96 ரன்கள் எடுத்த, மிட்செல் மார்ஷ் 6 ரன்னிலும், பெய்ன் 14 ரன்னிலும், ஸ்டார்க் 7 ரன்னிலும், லயன் 2 ரன்னிலும் ஆட்டமிழக்க 9 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்திருக்கும்போது வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்துள்ளது. கம்மின்ஸ் 17 ரன்னுடனும், ஹசில்வுட் 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் மோர்னே மோர்கல், மகாராஜ் தலா மூன்று விக்கெட்டுக்களும், ரபாடா 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.
முதல் இன்னிங்சில் 189 ரன்கள் முன்னிலைப் பெற்றதால் ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலியா 402 ரன்கள் முன்னிலைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது. நாளைய 4-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் ஆஸ்திரேலியா உடனடியாக கடைசி விக்கெட்டை இழக்க வாய்ப்புள்ளது. இதனால் தென்ஆப்பிரிக்கா சுமார் 420 ரன்கள் என்ற இலங்கை சேஸிங் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.