பாலாஜி – நித்யா விவகாரம், மும்தாஜ் – நித்யா மோதல் ஆகிய இரு விஷயங்கள் தொடர்பான காட்சிகளும் சர்ச்சைகளும்தான் இதுவரையான பிக்பாஸ் நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்திற்கும் பரபரப்பிற்கும் அடிப்படையாக அமைந்திருக்கிறது. இரண்டிலுமே நித்யா இருக்கிறார் என்பது விநோதமான கோணம். ‘பிக்பாஸ் வீட்டில் சரியாக செயல்படாத இரண்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் கட்டாயம் தலைவி ஜனனிக்கு வந்த போது அவர் தேர்ந்தெடுத்ததும் பாலாஜி – நித்யா ஆகிய இரு நபர்களையே. இவையெல்லாம் தற்செயலா அல்லது திட்டமிடப்பட்டதா என்பது தெரியவில்லை. ஆக, பிக்பாஸின் இதுவரையான மைலேஜூக்கு பெரிதும் உதவியிருப்பவர் நித்யா. நித்யா பாலாஜி விவகாரத்தையும் மீறி, இன்றைய எபிசோடில் ஹிட் அடித்த விஷயம் ஜனனி ஐஷ்வர்யாவின் லிப்லாக் சம்பவம்

நித்யா பாலாஜி

சில தருணங்களில் இணக்கமாக உரையாடும் பாலாஜியும் நித்யாவும் தனியான வேறு சந்தர்ப்பங்களில் சண்டைக்கோழிகளாக நிற்கும் முரணை புரிந்து கொள்வதும் சிரமமாக இருக்கிறது. பிடிவாதத்தின் மூலம் தன்னுடைய பிம்பத்தை கீழிறக்கிக் கொள்வதோடு, சக போட்டியாளர்களின் வெறுப்பையும் எளிதாக சம்பாதித்துக் கொள்கிறார் நித்யா. இதனால் தராசு பாலாஜியின் பக்கம் உயர்கிறது.

நான்காம் நாளின் சம்பவங்கள் இன்னமும் முடியவில்லை. ஜனனியும் வைஷ்ணவியும் ஆண் வேஷம் போட்டுக் கொண்டு உலவினார்கள். அதென்னமோ பெண்கள் ஆண் வேடம் அணிந்தால் அது பெரிதும் பொருந்தாமல் விநோதமாகவே இருக்கிறது.

‘சூரியன்’ திரைப்பட நகைச்சுவையின் ஒலி வந்தது. பொன்னம்பலமும் நித்யாவும் நீச்சல்குளத்தில் பத்துமுறை தள்ளிவிடப்பட வேண்டும். முறை வைத்து ஆளாளுக்கு தள்ளி விட்டார்கள். நித்யாவை பாலாஜியே ஒருமுறை உற்சாகமாக தள்ளி விட்டார். ‘ஸ்டன்ட்மேன்’ ஆன பொன்னம்பலமே சற்று தடுமாறினாலும் இந்த தண்டனையை நித்யா இயல்பாக கையாண்டார்.

நித்யா பாலாஜி

கோழி சத்தம் கேட்டவுடன் ரித்விகா – சென்றாயனின் தலையில் முட்டையை உடைத்தனர். சமையலுக்கு முட்டை போதவில்லை என்கிற பஞ்சாயத்து ஒருபுறம். இன்னொரு பக்கம் இப்படி வீணாகும் முட்டைகள். ‘ஷாம்பு’ மாதிரி முட்டையை தலையில் நன்றாக தேய்த்துக் கொண்டார் சென்றாயன். சில நிமிடங்களில் மறுபடியும் ‘சூரியன்’ காமெடி சத்தம் ஒலிக்க, நீச்சல்குளத்தில் தள்ளிவிடும் வைபவம் மீண்டும் நிகழ்ந்தது.

இன்னொரு பக்கம், யாஷிகாவும் டேனியும் இணைந்து வெங்காயம் நறுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். முட்டையும் வெங்காயமும் இணைந்து பிக்பாஸ் வீட்டை பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது. மறுபடியும் முட்டை உடைக்கும் நிகழ்ச்சி. ‘யார்லாம் இன்னும் உடைக்கலையோ, வந்து உடைங்க’ என்று சடங்கு செய்ய வந்த புரோகிதர் மாதிரி அழைத்துக் கொண்டிருந்தார்கள். வெங்காயம் நறுக்க கையில் வைத்திருந்த கத்தியோடு, சென்றாயனின் தலையில் யாஷிகா முட்டையை உடைக்க, சென்றாயனின் தலையில் சிறு காயம் ஏற்பட்டது போல.
மனிதர் சற்று அலறி விட்டார்.

‘யாஷிகா சின்னப்பொண்ணுல்ல.. மெச்சூரிட்டி இல்ல’ என்று பேசிக் கொண்டிருந்தார்கள். மெச்சூரிட்டி என்பதையெல்லாம் கடந்து, யாஷிகா தனது வயதுக்கே உரித்தான அதீத ஆர்வத்துடன் டாஸ்குகளில் ஈடுபட்டார் என்று தான் தோன்றுகிறது. மூன்று விரல்களில் ரத்த காயம் ஏற்பட்ட போதும், தொடர்ந்து வெங்காயத்தை நறுக்கிக்கொண்டே இருந்ததை, நாம் பின்னர் வரும் காட்சிகளில் பார்த்தோம்

‘கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலேயே ஆபத்து’ என்கிற தர்க்கம் சரியாகப் பொருந்தி வந்தது. தெரியாமல் சென்றாயனுக்கு காயம் ஏற்படுத்திய யாஷிகாவிற்கு, அதே கத்தியால் வெங்காயம் வெட்டும் போது விரல்களில் காயம் ஏற்பட்டது. ஏறத்தாழ அனைத்து உறுப்பினர்களும் பதறி ஓடி வந்தார்கள். அவர்களில் பெரும்பாலேனோர் ‘திடீர்’ டாக்டராக மாறி ஆலோசனை சொன்னார்கள்.

பாவம், யாஷிகாவும் டேனியும் அதிகாலை வரைக்கும் தொடர்ந்து வெங்காயம் நறுக்கிக் கொண்டிருந்தனர். வெங்காயம் நறுக்கினால் பொதுவாக கண்ணீர் வரும். ஆனால் கண்ணீர் பெருகி வருமளவிற்கு ஒரு மூட்டை வெங்காயத்தை நறுக்கச் சொல்லியிருப்பது அநியாயம். ‘உறிக்க உறிக்க வெங்காயத்தில் ஒன்றுமிருக்காது’ என்று தத்துவம் சொல்லுவார்கள். ஆனால் இங்கு வெங்காயம் தீராமலிருப்பதுதான் பிரச்னை. ‘என்னப்பா.. இது வெட்ட வெட்ட வந்துட்டே இருக்கு.’ என்று அலுத்துக் கொண்டார் டேனி.

யாஷிகா

மிகவும் களைப்புடன் காணப்பட்ட இவர்களைப் பார்க்க பாவமாக இருந்தது. ‘போதும் நிறுத்துங்க.. இதனால ஏதாவது பிரச்னை வந்தால் நான் பார்த்துக்கறேன்” என்ற மனிதாபிமான உணர்வோடு வந்தார் மும்தாஜ். மற்றவர்களும் இதை ஆமோதித்தார்கள். தலைவி ஜனனி செய்ய வேண்டிய காரியம் இது. ஆனால் அவர் ‘பிக்பாஸ்’ஸின் செல்லப்பிள்ளையாக இருக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், மும்தாஜ் தன்னிச்சையாக வந்து இந்த அதிரடி முடிவையெடுத்தார். முதல் சீஸனில் இதை விடவும் கடுமையான task-கள் நடைபெற்ற போது, எவருமே தடுத்து நிறுத்தவில்லை என்பது நினைவு வருகிறது. இந்த நோக்கில், மும்தாஜின் துணிச்சலும் மனிதாபிமான உணர்வும் பாராட்டத்தக்கது. ஆனால் வரும் வாரங்களில் இதுவே அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.

பிக்பாஸ் வீட்டின் துயிலெழுப்பும் பாட்டு. விஜய் பிறந்த நாள் என்பதாலேயோ என்னவோ, ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் ஒலித்தது. நேற்று நடந்த கடுமையான task காரணமாக சிலர் சோர்வாக இருந்தார்கள். வழக்கத்தை விடவும் அதிஉற்சாகமாக ஆடினார் சென்றாயன். மூன்றாம் பிறை கிளைமாக்ஸ் கமல் மாதிரி தாவித் தாவி இவர் ஆடியது விநோதமாக இருந்தது. ஐஸ்வர்யா வழக்கமான உற்சாகத்துடன் நடனமாடினார்.

காலையில் ஒலித்த பாடல், ஏதாவது task தொடர்பானதோ என்று குழம்பி விட்டதாக பொன்னம்பலமும் வைஷ்ணவியும் பேசிக் கொண்டார்கள். உளவியலில் ‘பாவ்லோவ் தியரி’ என்ற ஒன்று இருக்கிறது. குறிப்பிட்ட சமயங்களில் ஒலிக்கும் சத்தங்களை வைத்து மனிதர்களின் சில அகத்தூண்டுதல்களை தீர்மானிக்க முடியும் என்கிறார்கள்.

வெங்காயம் நறுக்கும் பணியிலிருந்து மும்தாஜ் தங்களை காப்பாற்றியதைப் பற்றி ஜனனியிடம் டேனி சொல்லிக் கொண்டிருந்தார். ‘நியாயமா நீதான் வந்து காப்பாத்தியிருக்கணும்” ‘நான் எப்படி அதை செய்ய முடியும்?” என்று ஒரு தலைவியாக ஜனனி சொன்னதும் சரியானதே.

டேனியல்

-தன்னுடைய அந்தரங்கப் பிரச்னையைப் பற்றி பிக்பாஸிடம் ரகசியமாக சொல்லிக் கொண்டிருந்தார் டேனி. வெங்காயம் நறுக்கிய காரணத்தினால் விவகாரமான உடல் பாகங்களில் அரிக்கிற காரணத்தினால் மோர் பாக்கெட் தரச் சொல்லி கெஞ்சினார். நண்பனிடம் சொல்வது மாதிரி ‘வெளில வந்து காசு கொடுத்திடறேன்’ என்றார். ‘நமைக்குது பிக்பாஸ்’ என்று முன்னமே ஒரு முறை சொன்னார். இந்தப் பிரச்னை அவருக்கு ‘தொடர்ச்சியாகவே’ இருக்கிறது போல.

‘சுந்தரி நீயும்.. சுந்தரன் நானும்’ பாடலுக்கு வெவ்வெறு விதமான முகபாவங்கள் தரும் எம்.எஸ்.பாஸ்கரின் செய்கையைப் போலவே இருக்கிறது பாலாஜியின் நடத்தை. கிச்சன் அருகே நின்று கொண்டு நித்யாவிடம் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தவர், சில நிமிடங்களிலேயே அனந்த் வைத்தியநாதனிடம் தன் குடும்ப பிரச்னையை கோபமான தொனியில் பேசிக் கொண்டிருந்தார். தன் ஜோடியிடமிருந்து பிரிந்த அனந்த் வைத்தியநாதன், ஏன் பாலாஜியின் விவகாரத்தை ஆர்வமாக கேட்டுக் கொண்டிருக்கிறார் என்கிற முரண் புரியவில்லை.

மும்தாஜ்

குழந்தை அழுகிற ஒலி கேட்டது. பாலாஜியும் மும்தாஜூம் குழந்தையாக மாறி நடிக்க வேண்டும். நூறு ரூபாய்க்கு நடிக்க வேண்டிய இடத்தில் ஆயிரம் ரூபாய்க்கு நடிக்கும் ஆர்வக்கோளாறு நடிகர் மாதிரி, மும்தாஜ் மிகையாக நடிப்பதை காணச் சகிக்க முடியா விட்டாலும், ‘காரெக்ட்டராகவே’ மாறி விடும் அவருடைய அர்ப்பணிப்பு உணர்வை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. சீனியர் நடிகை என்கிற அந்தஸ்தையெல்லாம் தூக்கி எறிவது சாதாரண விஷயமில்லை.

மும்தாஜ் அளவிற்கு பாலாஜி நடிக்கவில்லை. வைஷ்ணவி உணவு ஊட்ட வந்த போது ‘நீ மூஞ்சை அந்தப் பக்கம் திருப்பினா சாப்பிடறேன்’ என்றது நல்ல காமெடி. ‘ரொம்ப பர்பாமன்ஸ் பண்ணாதீங்க. மார்க்கை குறைச்சுடப் போறாங்க’ என்று மும்தாஜை கிண்டலடித்ததும் ‘குழந்தையா இருக்கறப்ப கூட வெங்காயம், தக்காளி புத்தி போவுதா பாரு’ என்று நக்கலடித்ததும் ரசிக்க வைத்தது.

மும்தாஜ்

‘ரெமோ’ திரைப்படத்தின் பாடல் ஒலிக்க, ஜனனியும் வைஷ்ணவியும் ‘ஆண்’ வேடத்திற்கு மாறினர். பாலாஜிக்கு குழந்தைக்கான ஒப்பனையை சிரிப்புடன் போட்டுக் கொண்டிருந்தார் நித்யா (உங்க காரெக்ட்டர்களை புரிஞ்சுக்கவே முடியலையே).

nthya sendra 09171 -ஆண் வேடத்தில் இருந்த ஜனனியிடம் ‘முத்தா’ வேண்டுமென்று அலப்பறை செய்து கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. ‘முத்தா டேஸ்டிங்’ என்று இதற்காக அவர் வைத்த பெயர் அகராதியில் உடனடியாக சேர்க்கப்பட வேண்டிய விஷயம். “நீ என்னை லவ் பண்ணலையே” என்று ஜனனி கேட்க, ‘நீ முதல்ல முத்தா கொடு, அப்புறம் டிசைட் பண்றேன்’ என்றார் ஐஸ்வர்யா. அதுவும் கன்னத்தில்ல வேண்டாம் உதட்டில் தான் வேண்டும் என அடம்பிடித்து, ஜனனியை லிப்லாக் செய்ய வைத்தார் ஐஷ்வர்யா. ஐஷ்வர்யா ஆர்மியில் இருக்கும் பல ஆண்களின் இதயம் நின்றிருக்கும்.

லிப்லாக்

‘நான் சமைக்கப் போகலாமா?” என்று மழலைக் குரலில் கேட்டார் மும்தாஜ். குழந்தைக்கு எப்படி சமைக்கத்தெரியும்? காரெக்ட்டராகவே வாழும் மும்தாஜிற்கு இது தெரிந்திருக்க வேண்டாமா?

‘நித்ய’ விவகாரம் மறுபடியும் துவங்கியது. தான் ஜாலியாகப் பழகினாலும் தன்னிடம் நித்யா கோபமாகப் பேசி விட்டார் என்கிற புகாரை முன்வைத்தார் ஐஸ்வர்யா. இதைத் தொடர்ந்து ஆளாளுக்கு நித்யா தொடர்பான நெருடல்களை அடுக்கத் துவங்கினார்கள். ‘அவங்களை அப்படியே விட்டுடுங்க.. இதை விசாரிச்சா.. பிரச்னை இன்னமும் மோசமாகும்’ என்றார் மும்தாஜ். மஹத் மட்டும் தனியாக சமையல் செய்து கொண்டிருப்பது ஆட்சேபிக்கப்பட ‘நான் பார்த்துக்கறேன். விடுங்க’ என்று நல்ல பிள்ளையாக பிரச்னையைத் தவிர்த்தார் மஹத். ‘பிரச்னைக்குரிய தன் கணவருடன் இங்கு இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் நித்யாவிற்கு இருக்கிறது. இது தவிர அவருக்கு வேறு சில பிரச்னைகளும் இருக்கலாம். இதையொட்டி அவரை அணுகலாம்’ என்ற உருப்படியான ஆலோசனையைச் சொன்னார் மமதி.

தலைவி ஜனனியை ‘கன்ஃபெஷன்’ அறைக்கு அழைத்தார் பிக்பாஸ். “இந்த லக்ஸரி task-ல் ரம்யா, வைஷ்ணவி, பாலாஜி, ஜனனி ஆகியோர் ஆர்வமாகப் பங்கேற்கவில்லை. வீட்டின் தலைவியாக இருப்பது சுலபமான பொறுப்பில்லை. நீச்சல் குளத்தில் தள்ளப்படுவது, முட்டை உடைப்பது ஆகிய இரு விஷயங்கள் மட்டும்தான் சம்பந்தப்பட்ட ஒலி வந்ததும் செய்ய வேண்டியது. மற்ற task-கள் தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட வேண்டியது. பொறுப்பாக வழிநடத்துங்கள்’ என்று எச்சரித்து அனுப்பினார் பிக்பாஸ்.

ஜனனி

வெளியில் வந்த ஜனனி இந்த எச்சரிக்கையைப் பற்றி மற்ற உறுப்பினர்களிடம் சொன்னார். பாவம் ரித்விகா, அப்போதுதான் குளித்து விட்டு வெளியே வந்தார். ‘முட்டைக் கோழி’ சத்தம் கேட்க அவருக்கும் சென்றாயனுக்கும் முட்டை அபிஷேகம் நடந்தது. பெண்களுக்கு நலங்கு வைப்பது போல, ‘வேறு யாராவது முட்டை உடைக்கலைன்னா வந்து உடைச்சுடுங்க’ என்று கூவிக் கொண்டிருந்தார்கள்.

ஒரு வழியாக வெங்காயம் நறுக்கும் task முடிந்தது. ‘விடாமுயற்சி, விஸ்வரூப வெற்றி’ என்கிற தத்துவத்தின் படி இந்த மகத்தான பணியை செய்து முடித்த யாஷிகாவையும் டேனியையும் எல்லோரும் பாராட்டினார். ஒரு பெரிய கூடை நிறைய வெட்டப்பட்டிருந்த அந்த வெங்காயத்தை பிறகு என்ன செய்வார்கள்? வீட்டில் ஒரு காரியமும் செய்யாமல் செல்லப்பிள்ளையாக வளர்ந்த யாஷிகா, காயம் அடைந்த கைகளைக் காட்டி தன்னுடைய துயரத்தை பிக்பாஸிடம் பகிர்ந்து கொண்டார். ‘வீட்டில் அடங்காததெல்லாம் ஊரில்தான் அடங்கும்’ என்கிற பழமொழியொன்று இருக்கிறது.

தூதுவராக இருக்கும் அனுமார் பணியை சென்றாயன் தொடர்ச்சியாக செய்து கொண்டிருந்தார். ‘உன்னை ரொம்ப உசுப்பேத்தறாங்க.. கவலையை விடு. நல்லதே நடக்கும்’ என்று பாலாஜியை ஆறுதல்படுத்திக் கொண்டார். பாலாஜியை ஏதோவொரு வார்த்தையால் நித்யா உதாசீனப்படுத்தி விட்டார் போலிருக்கிறது. ‘என்னால்தான் அவளுக்கு இந்த மரியாதையெல்லாம்’ என்று மும்தாஜிடம் ஆணாதிக்கத்தனமாக பொங்கிக் கொண்டிருந்தார் பாலாஜி. நேற்றைய நாளிலும் இதே காரணத்தைச் சுட்டிக் காட்டி நித்யா வருத்தப்பட்டதும் நினைவிற்கு வருகிறது.

நித்யா

இப்போது நித்யாவிடம் தூது போனார் சென்றாயன். ‘ஏதொவொரு வார்த்தையை பாலாஜியைச் சொல்லிட்டீங்களாமே?” என்று விசாரித்தார் சென்றாயன். ‘அது என்ன வார்த்தை.. சொல்லுங்க’ என்றார் நித்யா. அறிந்திருந்தாலும் கூட ஆண்களின் வாயிலிருந்து விஷயங்களைப் பிடுங்குவதை ஒரு சாகசக் கலையாகவே பெண்கள் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

team 09217 -janan aiajs 09533 -‘சொன்னபடி கேளு’ task-ல் சிறப்பாக செயல்பட்டதற்காக ஆயிரம் மதிப்பெண்களை வழங்கினார் பிக்பாஸ். ஆனால் சில ஜோடிகள் விதிகளை சரியாக பின்பற்றாத காரணத்தினால் நானூறு மதிப்பெண்களை பிடுங்கிக் கொண்டார். ‘கொடுத்தவனே எடுத்துக் கொண்டாண்டி’ பாடலை பின்னணியில் ஒலிக்க விட்டிருக்கலாம். என்றாலும் மும்தாஜ், யாஷிகா, டேனி ஆகிய மூன்று பேர்களும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதால் போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இதன்மூலம் இழந்த மதிப்பெண்கள் ஏறத்தாழ திரும்பி வந்தன. இதற்காக சம்பந்தப்பட்டவர்களை மற்றவர்கள் பாராட்டி மகிழ்ந்தார்கள்.

மதிப்பெண்களை இழந்த விஷயத்தில் எங்கே தவறு நடந்தது என்பதை ஜனனியுடன் வைஷ்ணவி விசாரித்துக் கொண்டிருந்தார். ‘ஏதாவது வார்னிங் தந்திருக்கலாமே?’ என்பது அவர் ஆதங்கம். (இது தொடர்பாக பிக்பாஸ் எச்சரிக்கை தந்ததை மறந்து விட்டாரோ, என்னமோ). “இல்ல.. இப்படி பண்ணாதான் இனி வரப்போகிற task-களில் நாம முதல்ல இருந்தே சீரியஸாக இருப்போம்” என்று ஜனனி சொன்னது சரியான விளக்கம். சமயங்களில் விளையாட்டுப் பிள்ளையாக இருந்தாலும் ஒரு தலைவருக்கான பொறுப்பை ஜனனி ஏறத்தாழ சரியாக கையாள்வதாகவே தோன்றுகிறது. அனைவரையும் பெரும்பாலும் அனுசரித்துப் போகிறார்.

மும்தாஜ்

‘இனிமேல் நித்யா இருக்கும் டீமில் இருக்க விருப்பமில்லை’ என்று மஹத்திடம் சொல்லிக் கொண்டிருந்தார் மும்தாஜ். நமக்கு காணக்கிடைக்கிற காட்சிகளின் படி, மும்தாஜ் பல சமயங்களில் நித்யாவை அவர் பொறுமையாக கையாள்வது போல்தான் தெரிகிறது. யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் தனியாக சதியாலோசனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். ‘நீ மத்தவங்க task-ல உதவி பண்றே. உன் task-ஐ கவனி’ என்று எச்சரித்துக் கொண்டிருந்தார் யாஷிகா.

நித்யா –மும்தாஜ் உரசல் மறுபடியும் ஆரம்பித்தது. ‘இங்கு என்ன பிரச்னையிருந்தாலும் சமையல் விஷயத்திற்கு முன்னுரிமை தர வேண்டும். மற்றவர்கள் பசியோடு இருப்பதற்கு நாம் காரணமாகக் கூடாது’ என்று மும்தாஜ் சொன்னது சரியான விஷயம். ‘நான் இங்க இருக்கும் போது ஏன் நீங்க கூப்பிடலை” என்று சிறுபிள்ளைத்தனமாக விவாதித்துக் கொண்டிருந்தார் நித்யா.

தன்னுடைய மகள் சொன்னதாலும், விவாகரத்து பிரச்னை காரணமாக தன் மீது படிந்துள்ள எதிர்மறையான பிம்பத்தை போக்க வேண்டும் என்கிற காரணத்தினாலும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நித்யா, அதற்கு நேர்மாறாக ஏன் தொடர்ந்து விரோதமாகவே நடந்து கொண்டிருக்கிறார் என்பது தெரியவில்லை. சில நபர்கள், ஒரு பிரச்னையைப் பற்றி சம்பந்தப்பட்டவர்களிடம் நேராக பேசாமல், வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு நபர்களிடம் தன் கோபத்தைக் காட்டிக் கொண்டிருப்பார்கள். நேராக விசாரித்தாலும் சரியாக பதில் சொல்ல மாட்டார்கள். நித்யா இந்த வகையா என்று தெரியவில்லை.

பிக்பாஸ்

மும்தாஜ், யாஷிகா, டேனி ஆகிய மூவர் மட்டும் task-ல் சிறப்பாக செயல்பட்டதால் லக்ஸரி பொருட்களை தேர்ந்தெடுக்கும் முடிவு அவர்களுக்கு மட்டும் தரப்பட்டது. இதர உறுப்பினர்கள் தங்களின் தேவையை கலந்தாலோசித்தால் மொத்த மதிப்பெண்களையும் இழக்க நேரிடும். (ப்பா.. எப்படில்லாம் யோசிக்கறாங்கப்பா).

இதற்கான ஒலி வந்ததும், மூவரும் விரைவாக செயல்பட்டு பொருட்களைத் தேர்ந்தெடுத்தார்கள். குறுக்கிட முடியாத அசெளகரியத்துடன் மற்றவர்கள் கவனித்துக் கொண்டிருந்தார்கள். மீதமிருந்த மதிப்பெண்களில் வேறு சில பொருட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாமே என்று சிலர் பிற்பாடு ஆதங்கப்பட்டனர். .. என்னது சிக்கன் ஒரு கிலோதானா? ஆளுக்கு ஒரு துண்டு கூட வராதே’ என்று வேதனையோடு கேட்டார் பொன்னம்பலம். அவருக்கு ஒருவேளை கூட காணாது போலிருக்கிறது. ‘நான் –வெஜ் வாசனையோடு சாப்பிடலாம், இல்ல.. அதைப் பாருங்க’ என்று ஆறுதல் சொல்லப்பட்டது.

மறுபடியும் பிக்பாஸின் குரல். ஒட்டுமொத்தமாக இந்த வீட்டில் சரியாக செயல்படாத இருவரைத் தேர்ந்தெடுத்து அறிவிக்க வேண்டும் என்று ஜனனியிடம் சொல்லப்பட்டது. மிகுந்த தயக்கத்துடன் அவர் முதலில் தேர்ந்தெடுத்தது பாலாஜியை. இது நியாயமான தேர்வே. குழந்தையாக நடிப்பதை பாலாஜி பெரும்பாலும் செய்யவேயில்லை.

ஜனனி தேர்ந்தெடுத்த இன்னொரு நபர் நித்யா. இந்த தேர்வில் அத்தனை நியாயமில்லை. மற்றவர்களுடன் இணக்கமான போக்கை நித்யாவால் கடைப்பிடிக்க முடியாவிட்டாலும், சமையல் விஷயத்தில் மாங்கு மாங்கென்று உழைத்துக் கொண்டுதான் இருந்தார். ஜனனி அதைப் பரிசிலீத்திருக்கலாம். வெற்று பஜனை செய்து கொண்டிருந்த வேறு போட்டியாளர்களோடு ஒப்பிடும் போது நித்யாவின் உழைப்பு அங்கீகரிக்கப்பட வேண்டியது. இது சார்ந்த குற்றவுணர்விலோ என்னமோ, ஜனனி பொங்கி பொங்கி அழுதார். நித்யாவிடம் சென்று மன்னிப்பும் கேட்டார். ஆனால் நித்யா இதை பெருந்தன்மையாகவும் இயல்பாகவும் எடுத்துக் கொண்டது சிறப்பு.

இன்று சனிக்கிழமை. ஆண்டவனின் தீர்ப்பு நாள். கமல் தொடர்பான பஞ்சாயத்துக் காட்சிகள், குறும்புகள், விசாரணைகள் போன்றவற்றால் இன்றைய நாளின் நிகழ்ச்சிகள் களை கட்டும் என்று எதிர்பார்க்கலாம்.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here