சென்னையில் தண்ணீர் தேங்கியிருந்த பள்ளத்தில் விழுந்து ஒருவர் பலியாகியுள்ள நிலையில், அவருடைய மரணத்திற்கு மழைநீர் காரணமல்ல என மாநகராட்சி விளக்கமளித்துள்ளது.
கோடம்பாக்கத்தில் ஜண்டா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் 56 வயதான நரசிம்மன். தனியார் நிறுவனத்தில் வாகன ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இன்று காலை பேருந்தில் செல்வதற்காக கோடம்பாக்கம் மேம்பாலம் இணைப்பு சாலையில் நடந்து வந்துள்ளார். மேடு பள்ளம் நிறைந்திருந்த அந்த சாலையில் மழை நீரும், கழிவு நீரும் கலந்து தேங்கியிருந்துள்ளது.
சரியாக மூடப்படாமல் இருந்த பாதாள சாக்கடை தொட்டியில் கால் இடறி அருகேயிருந்த ஒரு பள்ளத்தில் தடுமாறி விழுந்தவர் மயக்கமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கீழப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
விபத்து குறித்து தகவலறிந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக தண்ணீரை அப்புறப்படுத்தி, பள்ளத்தை தற்காலிகமாக சீரமைத்தனர்.
விபத்து குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அளித்த விளக்கத்தில், மழை நீர் தேங்கியதோ, கழிவுநீர் தொட்டியோ மரணத்திற்கு காரணமல்ல என தெரிவித்துள்ளார். மேலும், இவர் மாரடைப்பால் உயிரிழந்து இருக்கலாம் என சந்தேகிக்கப் படுவதாகவும், பிரேத பரிசோதனைக்குப் பிறகு முழு விபரங்கள் தெரிய வரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.