* 8 வங்கிகள் புகாரின் பேரில் சிபிஐ வழக்கு
* வீடு, அலுவலகங்களில் அதிரடி ரெய்டு
ஐதராபாத்: சென்னையில் நகைக்கடை அதிபர் 824 கோடி வங்கி மோசடி செய்த பரபரப்பு அடங்குவதற்குள் ஐதராபாத்தைச் சேர்ந்த கட்டுமான நிறுவன தொழிலதிபர் யூனியன் பாங்க் ஆப் இந்தியா உட்பட 8 வங்கிகளில் 1,394 கோடி கடன் வாங்கி மோசடி செய்துள்ளது அம்பலமாகி இருக்கிறது. இதையடுத்து, தொழிலதிபரின் வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது மாமா மெகுல் சோக்ஷியின் நிறுவனங்கள், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் உத்தரவாத கடிதங்களை பெற்ற இந்திய வங்கிகள் பலவற்றில் 12,700 கோடிக்கு கடன் வாங்கி மோசடி செய்தது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தபோது, இருவரும் குடும்பத்துடன் வெளிநாடு தப்பி விட்டனர். இவரை தொடர்ந்து ரோட்டோமேக் பேனா தயாரிப்பு நிறுவன உரிமையாளர் விக்ரம் கோத்தாரி, 3,700 கோடி கடன் வாங்கி மோசடி செய்தது வெளிச்சத்துக்கு வந்தது. அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் நடந்துள்ள வங்கி கடன் மோசடிகள் ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வர தொடங்கின. இதனால் அதிர்ச்சி அடைந்த மத்திய அரசு, கடன் வாங்கி மோசடி செய்த தொழிலதிபர்கள் பற்றி சிபிஐ.யிடம் புகார் அளிக்கும்படி சமீபத்தில் உத்தரவிட்டது. அதன் பேரில், மிகப்பெரிய அளவிலான வங்கி கடன் மோசடிகள் ஒவ்வொன்றாக வெளிவர தொடங்கி உள்ளன. சென்னையை சேர்ந்த ‘கனிஷ்க் நகைக்கடை’ அதிபர், எஸ்பிஐ வங்கியில் 824 கோடி கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்திருப்பது நேற்று முன்தினம் அம்பலமானது. இந்த பரபரப்பு அடங்கும் முன்பாக, ஐதராபாத்தைச் சேர்ந்த ‘டோடம் இன்பராஸ்டிரக்சர் லிமிடெட்’ என்ற கட்டுமான நிறுவனம், யூனியன் பாங்க் ஆப் இந்தியா மற்றும் 8 வங்கிகளில் 1,394 கோடி வாங்கி மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் சாலைகள், தண்ணீர் குழாய்கள் அமைக்கும் பணி உட்பட பல்வேறு கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தின் இயக்குனர்களாக சலாலித், அவரது மனைவி கவிதா ஆகியோர் உள்ளனர்.
இவர்கள் யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் மட்டும் 303.84 கோடி கடன் வாங்கி மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக சிபிஐ.யிடம் யூனியன் பாங்க் ஆப் இந்தியா புகார் அளித்துள்ளது. இது குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்தது. அப்போது, இந்நிறுவனம் மேலும் 7 வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்துள்ளது தெரிந்தது. இது குறித்து சிபிஐ அதிகாரி கூறுகையில், ‘‘யூனியன் பாங்க் ஆப் இந்தியா உட்பட 8 வங்கிகளில் டோடம் நிறுவனம் கடன் வாங்கியுள்ளது. இந்நிறுவனம் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய மொத்த தொகை 1,394.43 கோடி இந்த கணக்கு கடந்த 2012ல் வராக் கடனாக மாறியுள்ளது. வங்கியில் கடன் வாங்கிய பணம் எல்லாம் வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்டு, மிகைப்படுத்திய செலவு கணக்கு காட்டி மோசடி செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.
இந்த மோசடி தொடர்பாக ஐதராபாத்தில் டோடம் நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்கள், இதன் உரிமையாளர்கள் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அதில், பல்ேவறு முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. தொழிலதிபர்கள் கடன் வாங்கி மோசடி செய்த தகவல்கள் தற்போது ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கி இருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.