உயிரை மாய்த்துக் கொண்ட நடிகை சித்ராவின் கடைசி வீடியோ பதிவு வைரலாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் விஜே சித்ரா. தொகுப்பாளினியாக ஊடகத்துறையில் நுழைந்த அவர் படிப்படியாக முன்னேறி நடிகையானார். இவரது நடிப்புக்கு ரசிகர்கள் ஏராளம். அதேபோல் இவரும் தனது ரசிகர்களின் பிறந்தநாளன்று அவர்களது வீட்டுக்கு நேரடியாக சென்று சர்ப்ரைஸ் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் உருவாக்கிய வீடியோக்கள் மற்றும் தனது புதிய புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவரை 1.8 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகிறார்கள். பெரும்பாலான புகைப்படங்களில் புன்னகையுடன் காட்சியளிக்கும் சித்ரா இன்று அதிகாலை தனியார் ஓட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்டார். அந்தப் புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருப்பார்கள்.
சித்ரா வெளியிட்டிருக்கும் கடைசி இன்ஸ்டாகிராம் புகைப்படத்தில் கூட அவரது அழகு புன்னகையை உதிர்த்திருப்பார். அதேபோல் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் சின்னத்திரை நடிகை சரண்யாவுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக பதிவு செய்யப்பட்ட செல்ஃபி வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.
அதில் ஒரு வீடியோவில் மேடம் லவ் பண்ணதும் பண்ணாங்க எனக்கூறி சித்ராவை சரண்யா கிண்டலடிக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட சித்ரா திருவான்மியூரில் உள்ள தனது வீட்டுக்கு சென்று வர முடியாத காரணத்தால் வருங்கால கணவர் ஹேமந்த் ரவியுடன் தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். இன்று அதிகாலை குளிக்க வேண்டும் அதனால் வெளியே இருக்குமாறு ஹேமந்திடம் கூறியுள்ளார் சித்ரா.
பின்னர் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் ஓட்டல் ஊழியரிடம் மாற்று சாவி வாங்கி அறையைத் திறந்து பார்த்த போது சித்ரா தூக்கில் தொங்கி இறந்த நிலையில் இருந்ததாக ஹேமந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் விசாரணையில் தொடர் மன அழுத்தத்தில் சித்ரா இருந்து வந்ததாகவும் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக ஹேமந்த் ரவி தெரிவித்ததாகவும், மேலும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக போலீசிடம் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த அக்டோபர் 19-ம் தேதி இருவருக்கும் பதிவுத் திருமணம் செய்து கொண்டதும் விசாரணயில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து தற்போது சித்ராவின் மரணம் குறித்து ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.