சித்ரா தற்கொலை: VJ Chithra Suicide: வெகுநேரமாகியும் சித்ரா கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த ஹேமந்த், ஓட்டல் நிர்வாகிகளிடம் மாற்று சாவி பெற்று கதவை திறந்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் சித்ரா தொகுப்பாளினியாக இருந்து வந்தவர். தொகுப்பாளினி, நடிகை, நடனம், மாடலிங் என பல திறமைகளை சித்ரா கொண்டிருந்தார். 1992ம் ஆண்டு மே 2ஆம் தேதி சென்னையில் பிறந்த சித்ரா, 2013ம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் சட்டம் சொல்வது என்ன நிகழ்ச்சியில் முதன் முதலாக தொகுப்பாளினியாக அறிமுகமானார்.
அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து வந்தார்.
திரைப்படங்களிலும் நடித்துள்ள சித்ரா, தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியிலும் அசத்தியுள்ளார். தற்போது இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில்தான், சித்ராவின் திருமணம் குறித்த பேச்சு பரவியது. கடந்த ஆகஸ்ட் மாதம் நிச்சியதார்த்தமும் நடந்து முடிந்தது. சித்ரா திருமணம் செய்துகொள்ள இருந்தவர் பெயர் ஹேமந்த் ரவி. விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக கூறியிருந்த சித்ரா, இன்று அதிகாலை திடிரென தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வருங்கால கணவருடன் ஓட்டல் அறையில் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டிருந்திருக்கிறார்.
இந்நிலையில், நள்ளிரவில் படப்பிடிப்பு முடிந்து அறைக்கு திரும்பிய சித்ரா, அதிகாலை வாக்கில் குளிக்கப்போவதாகவும், அறைக்கு வெளியே இருக்குமாறும் ஹேமந்த்திடம் கூறியிருக்கிறார்.
அவரும் வெளியில் காத்திருக்கிறார். ஆனால், வெகுநேரமாகியும் சித்ரா கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த ஹேமந்த், ஓட்டல் நிர்வாகிகளிடம் மாற்று சாவி பெற்று கதவை திறந்துள்ளார். அங்கு பேரதிர்ச்சியாக சித்ரா தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் ஹேமந்த். உடனே காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
தான் சார்ந்துள்ள துறை ரீதியாக மன அழுத்தமாக, வருங்கால கணவருடன் ஏதேனும் பிரச்னையா, அல்லது வேறு ஏதேனும் காரணமா உள்ளிட்ட கோணங்களில் போலீசர விசாரித்து வருகின்றனர்.இதனிடையே, சித்ராவின் மறைவுக்கு சின்னத்திரை கலைஞர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.