ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் சார்பில் 30க்கும் மேற்பட்ட சாட்சியங்களிடம் நீதிபதி விசாரணை நடத்தியுள்ளார். அந்த சாட்சியங்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நீதிபதி பலரிடம் விசாரணை நடத்தினார். இந்த நிலையில், கடந்த மார்ச் 12ம் தேதி சசிகலா பிரமாண வாக்குமூலம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த வாக்குமூலத்தில், செப்டம்பர் 22ம் தேதி இரவு அப்போலோ மருத்துவமனையில் அளித்த சிகிச்சைக்கு பிறகு எமர்ஜென்சி வார்டில் இருந்து ஜெயலலிதா கொண்டு வரப்பட்ட போது, ராமமோகனராவ், ராமலிங்கம், ஷீலாபாலகிருஷ்ணன், பிரீத்தி ரெட்டி பார்த்தனர். செப்டம்பர் 27ம் தேதி மாலை காவிரி பிரச்னை குறித்து மருத்துவமனையில் அதிகாரிகளுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.
அப்போது, தலைமை செயலாளகராக இருந்த ராமமோகன ராவ், அட்வகேட் ஜெனரல் முத்துக்குமாரசாமி, ஜெயலலிதா ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், தனிப்பிரிவு செயலாளராக இருந்த ராமலிங்கம், வெங்கட்ராமன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, ஜெயலலிதா அளித்த ஆலோசனையின் படிதான் பிரமாண பத்திரம் தயாரானது. செப்டம்பர் 27ம் தேதி ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த இரண்டாவது தள அறையில் இருந்து தரைத்தளத்தில் உள்ள ஸ்ேகன் மையத்திற்கு ஸ்டெச்சரில் கொண்டு செல்லப்பட்டார். அப்போது, அவரது பாதுகாப்பு அதிகாரி வீர பெருமாள், பெருமாள்சாமி அவரை பார்த்தனர். அவர்களிடம் ஜெயலலிதா பேசினார். அப்போது, அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், சி.விஜயபாஸ்கர், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் தூரத்தில் இருந்து ஜெயலலிதாவை பார்த்தனர். நவம்பர் 19ம் ேததி ஜெயலலிதாவை தனி அறைக்கு மாற்றினார்கள். அப்போது தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் உள்ளிட்ட ஒரு சில அமைச்சர்கள், மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை ஜெயலலிதாவை பார்த்தனர் என்றும் அதில் கூறியுள்ளார்.
ஆனால், அமைச்சர்கள் பலர் மருத்துவமனையில் இருந்த போது ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்றே தெரிவித்தனர். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஜெயலலிதா இட்லி சாப்பிடார் என்று சொன்னதெல்லாம் பொய் என்று பகிரங்கமாக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். இதனால், சசிகலா வாக்குமூலத்தில் கூறியது உண்மையா? அல்லது அமைச்சர்கள் கூறியது உண்மையா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, சசிகலா வாக்குமூலத்தின் அடிப்படையில், இது தொடர்பாக அமைச்சர்களிடம் விசாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விசாரணை ஆணையம் சார்பில் அமைச்சர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்று ஆணையம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.