கனடாவில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்தாலும், உருமாறிய வைரஸ் பாதிப்புகள் அதிகரித்திருப்பதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கனடாவில் இதுவரை 830,000க்கும் அதிகமான கொரோனா பாதிப்புகளும், 21,500க்கும் அதிகமான இறப்புகளும் பதிவாகியுள்ளன.
கடந்த ஜனவரியில் ஒவ்வொரு நாளும் 8,000-க்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் பதிவாகியிருந்த நிலையில், கடந்த 7 நாட்களாக ஒரு நாளைக்கு 3,000-க்கும் குறைவான பாதிப்புகள் மட்டுமே பதிவாகி வருகின்றன.
இந்நிலையில், நாட்டில் இப்போது மொத்தமாகவே 35,700 பாதிப்புகள் செயலில் உள்ளதாக கனடாவின் Public Health Agency தெரிவித்துள்ளது.
பாதிப்புகள் குறைந்து வந்தாலும் இதில் ஒரு திருப்பமாக, ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலை கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வெளியிட்டுள்ளார்.
கடந்த 2 மாதங்களாக, மிகவும் பரவக்கூடிய மற்றும் உயிருக்கு அதிக ஆபத்து உடையதாக கருதப்படும் பிரித்தானியா, தென்னாபிரிக்கா மற்றும் பிரேசிலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் கனடாவில் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
B.1.1.7 எனப்படும் பிரித்தானிய வகை வைரஸால் 540 பேரும், B.1.351 எனும் தென்னாப்பிரிக்க வகை வைரஸால் 33 பேரும் மற்றும் P.1 எனப்படும் பிரேசில் வகை வைரஸால் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இப்போது கனடாவின் 10 மாகாணங்களில் இந்த பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், மற்ற பகுதிகளிலும் வேகமாக பரவும் அபாயம் எழுந்துள்ளதாக நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் கனடா செய்திகளைப் படிக்க எங்களுடன் இணையுங்கள்.