ஒமேகா-3 என்பது ஒரு வகை கொழுப்பு அமிலம். நோய் எதிர்ப்பு மண்டலம், நுரையீரல், இதயத்தின் செயல்பாட்டுக்கு துணைபுரியும் சுரப்பிகள், நாளமில்லா சுரப்பிகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் சரியாக நடைபெறுவதற்கு ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தின் பங்களிப்பு இன்றியமையாதது. ஒமேகா 3 குறைபாடு ஏற்பட்டால் உடல் நல பிரச்சினைகள் ஏற்படும்.
உடலில் ஒமேகா 3 குறைந்தால் தென்படும் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?
சரும பிரச்சினைகள்: உடலில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் குறைவாக இருக்கிறது என்பதை முதலில் வெளிப்படுத்துவது சருமம்தான். சருமம் வறண்டுபோவது, இயற்கையாகவே முகப்பருக்கள் அதிகரிப்பது போன்றவை ஒமேகா-3 குறைபாட்டின் அறிகுறியாகும். அத்துடன் ஒமேகா-3 என்பது சருமத்தின் வெளிப்புற தோலில் உள்ள கொழுப்பு உள்ளடக்கத்தின் முக்கிய பகுதியாகும். ஈரப்பதத்தை தக்கவைத்து, வியர்வையை வெளியேற்றும் சுரப்பியாகவும் அது செயல்படுகிறது. வறண்ட சருமம் மற்றும் முன்கூட்டிய சுருக்கங்கள் தென்படுவதும் ஒமேகா 3 பற்றாக்குறையின் ஆரம்ப அறிகுறியாக
இருக்கலாம்.
மூட்டு வலி: ஒமேகா-3 சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்பையும் கொண்டது. அதனை உணவில் சேர்த்துக்கொள்வது மூட்டு வலியை குறைக்க உதவும். மூட்டு வலி அதிகரித்தல், மூட்டு தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் அதுவும் ஒமேகா 3 குறைபாட்டுக்கான அறிகுறியாக இருக்கலாம்.
மன அழுத்தம்: ஒமேகா-3 உட்கொள்வது மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இது மனநிலையை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது. மூளையின் நரம்பியல் செயல்பாட்டையும் சீராக்குகிறது. ஒமேகா 3 குறைந்தால் மனஅழுத்தம் ஏற்படும்.
கூந்தல் பிரச்சினைகள்: முடி உதிர்வு, முடி அடர்த்தி குறைவு, முடி வெடிப்பு, முடி வறட்சி போன்றவை ஒமேகா 3 குறைபாட்டின் அறிகுறிகளாகும்.பார்வை குறைபாடு: கண் வறட்சி, கண் நோய், கண் தசைச் சிதைவு, குளுக்கோமா போன்ற கண் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கும் தன்மை ஒமேகா 3 கொழுப்பு அமிலத்துக்கு இருக்கிறது. கண் சார்ந்த குறைபாடுகள் இருந்தால் அது ஒமேகா 3 குறைபாட்டுக்கான அறிகுறியாக இருக்கலாம்.
எடை அதிகரிப்பு: செல்களின் வளர்சிதை மாற்ற செயல்பாட்டை அதிகரிக்கவும் ஒமேகா 3 உதவுகிறது. உணவில் ஒமேகா-3 குறைபாடு இருந்தால் வளர்சிதை மாற்றம் குறையும். அதனால் உடல் எடையும் அதிகரிக்கக்கூடும்.
ஞாபகத்திறன்: ஒமேகா-3 குறைபாடு இருந்தால் கவன சிதறல், நினைவாற்றல் குறைபாடு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடும். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கொண்ட உணவுகளை தொடர்ந்து உட்கொள்வது, மூளையின் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். ஞாபகத்திறனும் மேம்படும்.
தூக்கமின்மை: தூக்கமின்மையால் அவதிப்படுவதும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உடலில் குறைந்திருப்பதற்கான அறிகுறியாகும். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உடலில் போதுமான அளவு இருந்தால் அவர்கள் நன்றாக தூங்குவார்கள் என்று குறிப்பிடுகிறது.
மாதவிடாய் சுழற்சி: மாதவிடாய் அதிக நாட்கள் நீடிப்பது, அதிக அளவில் ரத்தம் உறைதல் பிரச்சினையை எதிர்கொள்வது உணவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தை குறைவாக சேர்த்துக்கொள்வதன் விளைவாகும்.
இதய பிரச்சினைகள்: ஒமேகா-3 இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. அது இதய நோய் தாக்காத அளவுக்கு பாதுகாப்பு வழங்குகிறது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொழுப்புகளின் அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.