மாசி மாதம் கும்ப மாதம். சூரியன் பெயர்ச்சியை வைத்து தமிழ் மாத ராசி பலன்கள் கணிக்கப்படுகிறது. மாத கிரகங்களின் பெயர்ச்சியும் சில நன்மைகளை தரும். மாசி 1ஆம் தேதி விஷ்ணுபதி புண்ணியகாலம் ஆரம்பமாகிறது. மகாவிஷ்ணு ஆலயங்களுக்கு சென்று வணங்கலாம். உங்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும். மாசி மாதத்தில் கன்னி, துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன நடைபெறும் கல்யாணம் கை கூடி வருமா என்று பார்க்கலாம்.

மாசிமாதம் சூரியன் கும்பம் ராசியில் சஞ்சரிக்கும் மாதம். இந்த மாதத்தில் சுக்கிரன் மீனத்தில் உச்சமடைந்துள்ளார். சனி மகரத்திலும் மிதுனத்தில் ராகு, செவ்வாய், கேது, குரு தனுசு ராசியிலும் சஞ்சரிக்கிறார். கும்பம் ராசியில் புதன் சஞ்சரிக்கிறார்.

கிரகங்களின் ராசி மாற்றம் இந்த மாதம் உள்ளது. கும்பம் ராசியில் உள்ள புதன் 4ஆம் தேதி வக்ரமடைகிறார். சுக்கிரன்16ஆம் தேதி மேஷம் ராசிக்கு மாறுகிறார். மாசி 27ஆம் தேதி புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் ராசி மாற்றத்தின்படி கன்னி, துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

பேச்சில் கவனம்

கன்னி ராசிக்காரர்களே உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் குரு, கேது, செவ்வாய் சஞ்சரிக்கின்றனர். ஐந்தாம் வீட்டில் சனி, ஆறாம் வீட்டில் சூரியன், புதன், ஏழாம் வீட்டில் சுக்கிரன் உச்சமடைந்துள்ளார். பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் ராகு சஞ்சரிக்கிறார். நான்கில் கேது செவ்வாய் குரு கூட்டணி சாதகமாக இல்லை. எதையும் முடிவு எடுக்கும் முன் கவனம் தேவை. ஆலோசனை செய்து முடிவு எடுங்க. குடும்பங்களில் சில குழப்பங்கள் ஏற்படும். பிசினஸ்ல கவனம் தேவை. வார்த்தைகளை யோசித்து பேசுங்க. அவசரப்பட்டு பேசி விட்டு அவதிப்பட நேரிடும்.

வெற்றிகரமான மாதம்

வெளியூரில் இருந்து வரும் தகவல் நன்மையை கொடுக்கும். தொழில் ஸ்தானத்தை செவ்வாய், குரு பார்வையிடுவதால் செய்யும் தொழில் முன்னேற்றத்தை கொடுக்கும். ஆறாம் வீட்டில் ராசி அதிபதி மறைந்திருப்பதால் பங்குச்சந்தை முதலீடுகளில் கவனம் தேவை. நீண்ட தூரத்தில் இருந்து வரக்கூடிய தகவலால் நன்மை வரும். உழைப்புக்கு வெற்றி கிடைக்கும். கஷ்டத்திற்கு விடிவு காலம் வந்து விட்டது. ஏற்றுமதி இறக்குமதி தொழிலால் லாபம் உண்டு. மாத பிற்பகுதியில் பணத்தை பத்திரப்படுத்துங்கள். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக வைத்துக்கொள்ளுங்கள். செலவுகளை கட்டுப்படுத்துங்கள். இந்த மாதம் கன்னி ராசிக்காரர்களுக்கு குறைகள் நீங்கி நன்மைகள் நடைபெறும். புதன்கிழமை பெருமாளை துளசி மாலை அணிவித்து வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும்.

திடீர் அதிர்ஷ்டம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, உங்க ராசிக்கு முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டில் குரு, கேது, செவ்வாய் சஞ்சரிக்கிறார். நான்காம் வீட்டில் சனி, ஐந்தாம் வீட்டில் சூரியன், புதன், ஆறாம் வீட்டில் சுக்கிரன் உச்சமடைந்துள்ளார். ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் ராகு சஞ்சரிக்கிறார். நல்ல வேலை கிடைக்கும், சொந்த தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். லாபம் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும். உங்க ராசி நாதன் உச்சமடைந்துள்ளதால் நீங்க கவனமாக இருங்க. உல்லாச பயணம் செல்வீர்கள்.

ஆரோக்கியத்தில் அக்கறை

கணவன் மனைவி உறவில் கவனமாக இருங்க. விட்டுக்கொடுத்து போங்க வாழ்க்கை இனிக்கும். செய்யும் தொழிலில் தைரியம் கூடும். இளைய சகோதரர்களால் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் கவனமாக பேசுங்க. மூத்த சகோதரர்களால் நன்மைகள் நடக்கும். அம்மா வழி உறவுகள், தாய்மாமன்களால் நன்மைகள் நடக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். இடமாற்றங்கள் ஏற்படும். சிலர் வீடு, வண்டி வாகனங்களை மாற்றுவீர்கள். எந்த செயலை செய்வதற்கு முன்பாக மகாலட்சுமி தாயாரை வணங்கிவிட்டு செய்யத் தொடங்குங்கள் நன்மைகள் நடைபெறும்.

பணவருமானம்

செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, உங்க ராசி நாதன் செவ்வாய் இரண்டாம் வீட்டு அதிபதி குரு உடன் இணைந்திருக்கிறார். மூன்றாம் வீட்டில் சனி, நான்காம் வீட்டில் சூரியன், புதன், ஐந்தாம் வீட்டில் சுக்கிரன் எட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. செவ்வாய் குரு உடன் இணைந்து குரு மங்கள யோகத்தோடு இருக்கிறார். இந்த மாதம் உங்களுக்கு பணவரவு அபரிமிதமாக இருக்கும். உங்களின் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் உச்சமடைந்துள்ளார். பொருளாதார பிரச்சினைகள் தீரும். வராத பணம் எல்லாம் தேடி வரும். கை நிறைய வருமானம் கொட்டப்போகுது.

காதல் மலரும்

உங்க பேச்சில் திறமை அதிகமாகும். சொந்த தொழிலில் லாபம் வரும். பயணங்களால் லாபம் வரும். பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சரஸ்வதி யோகம் தேடி வந்துள்ளது. படித்தது நினைவில் தங்கும் நன்மைகள் அதிகம் தேடி வரும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உச்சம் பெற்ற சுக்கிரன் மீது செவ்வாயின் பார்வை விழுவதால் கணவன் மனைவி உறவில் சந்தோஷம் தாண்டவமாடும். காதல் உங்களுக்கு கைகூடி வரும். கல்யாண யோகம் வந்து விட்டது. உங்க பேச்சிற்கு மனம் மயங்குவார்கள். சொந்தங்கள் பந்தங்கள் என சந்தோஷமாக தேடி வருவார்கள்.