விவசாயிகள் போராட்டத்தின் பின்னணியில் பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளின் சதித்திட்டம் இருப்பதாக மத்திய அமைச்சர் ராசேப் தான்வே குற்றம்சாட்டியுள்ளார்.
வேளாண் சட்டங்கள் தொடர்பான மத்திய அரசின் பரிந்துரைகளை ஏற்க மறுத்த விவசாயிகள், வரும் 14ம் தேதி நாடு முழுவதும் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம், 15வது நாளை எட்டியுள்ளது. வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதன்படி வரும் 14ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
14ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரித்துள்ளனர். வரும் 12ம் தேதி ஜெய்ப்பூர் – டெல்லி, ஆக்ரா – டெல்லி விரைவுச்சாலைகளில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ள விவசாயிகள், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், டெல்லிக்கு வரவும் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, விவசாயிகள் போராட்டத்தின் பின்னணியில் பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளின் சதித்திட்டம் இருப்பதாக மத்திய அமைச்சர் ராசேப் தான்வே குற்றம்சாட்டியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்திலும் இஸ்லாமிய மக்கள் தவறாக வழி நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.