சினிமாவில் வெற்றிபெறுவது கடினம். வெற்றியைத் தக்கவைத்துக்கொள்வது அதைவிடக் கடினம். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல வெற்றிப் படங்களின் மூலம் பல லட்சம் ரசிகர்களைப் பெற்றிருக்கிறார், நடிகர் விஜய். மக்கள் அவரை அபிமான நடிகராக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் விஜய்யை வெற்றி நாயகன் என்கிறார்கள். இரண்டு படம் சொதப்பினாலே காணாமல் போகும் நடிகர்கள் மத்தியில், தொடர்ந்து இருபத்தைந்து ஆண்டுகளாகப் பெயர், புகழோடு இருப்பதே நடிகர் விஜய்யின் சிறப்பு. தமிழ் சினிமாவின் மெர்சல் நாயகன் விஜய், இன்று தனது 44-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரைப் பற்றிய 44 மொமன்ட்ஸ் இதோ!

IMG 20180122 170158 17118 11219 -

ஜூன் 22, 1974-ல் சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவனையில் பிறந்தவர், விஜய். குறைப் பிரசவம். ஆம், எட்டாவது மாதத்திலேயே பிறந்துவிட்டார் விஜய். விஜய் பிறந்த நேரத்தையும் நட்சத்திரத்தையும் கணித்த விஜய்யின் தாத்தா நீலகண்டன், `இது ராமருடைய ராசி, நட்சத்திரம்’ எனச் சொல்லி பூரித்துப்போனாராம்.

விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான முதல் படம் `வெற்றி’. நீண்ட நாள்களுக்குப் பிறகு பி.எஸ்.வீரப்பா தயாரித்த படம் இது. இப்படத்தில் விஜய்யின் சுட்டித்தனமான நடிப்பைப் பார்த்த வீரப்பா,`ரொம்ப நல்லா நடிச்சே… வாழ்க’ என வாழ்த்தி, விஜய்யின் நடிப்புக்குப் பரிசாக 500 ரூபாய் வழங்கினாராம்.

`வசந்தராகம்’ படத்தில் சிறு வயது விஜயகாந்தாக வரும் விஜய், ஒரு காட்சியில் தனது அக்கா மகளுக்குத் தாலி கட்டுவார். இந்தக் காட்சியைப் படமாக்கும்போது, இயக்குநரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சி `ரெடி, ஆக்‌ஷன்’ என்று பலமுறை சொல்லியும் தயங்கியபடி நின்றுகொண்டிருந்தாராம், விஜய். `டேய் இதெல்லாம் சினிமாவுக்குதான்டா, சும்மா கட்டு’ என அப்பா ரிலாக்ஸ் செய்தபிறகே தாலி கட்டியிருக்கிறார்.

விஜய் – வித்யா இருவரின் முதல் எழுத்துகளை இணைத்து `வி.வி கிரியேஷன்ஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார், எஸ்.ஏ.சி. இந்த பேனரில் உருவான முதல் படம், `வீட்டுக்கு ஒரு கண்ணகி’. இந்தப் படத்தின் பூஜையின்போது குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தது விஜய்யின் தங்கை வித்யாதான்.

59095 11238 -

விஜய் அதீத அமைதிக்குக் காரணம், அவரது தங்கை வித்யாவின் மறைவு. வித்யா அம்மாவின் வயிற்றில் இருக்கும்போது, குட்டிப் பாப்பாவிடம் எப்படிப் பேசுவேன், எப்படிக் கொஞ்சுவேன் எனக் கதை கதையாக அம்மா ஷோபாவிடம் சொல்வாராம், விஜய்.

தன்னை யானையாக நினைக்கச் சொல்லி, தங்கை வித்யாவை முதுகில் அமரவைத்து வீட்டைச் சுற்றிவருவது சிறுவயது விஜய்க்குப் பிடித்த விளையாட்டு. பள்ளியில் `எப்படா ஸ்கூல் விடும், பாப்பாவைப் போய் பார்க்கலாம்’ எனக் கடைசி பெல்லுக்காகக் காத்திருப்பார், விஜய். தங்கை வித்யா இருந்திருந்தால், கலகலப்பான விஜய்யைப் பார்த்திருக்கலாம்.

`அஞ்சலி’ படத்தில் வரும் `இரவு நிலவு…’ பாடலுக்குப் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் ஆடினார், விஜய். இப்போது டான்ஸில் வெளுத்துக்கட்டும் விஜய், அந்தப் பாடலில் குரூப் டான்ஸர்தான். விஜய்யின் நடனத்தை உன்னிப்பாகக் கவனித்த ஆசிரியர்களுக்கு, செம சர்பிரைஸ். அதன்பிறகு விஜய்யின் டான்ஸ் பெர்ஃபாமன்ஸ் இல்லாமல் பள்ளியில் எந்த ஃபங்ஷனும் நடந்ததில்லை என்பது தனிக்கதை.

விஜய்க்கு மிகவும் பிடித்த ஆசிரியர், மீனா. விஜய்யின் ஆங்கில ஆசிரியை. மீனா டீச்சர் கிளாஸ் ரூமுக்குள் என்ட்ரி ஆனால், குஷியாகிவிடுவாராம் விஜய். ஹோம் வொர்க் செய்யவில்லை என்றால்கூட `ஏன் செல்லம் ஹோம் வொர்க் பண்ணலை?’ என அன்பாகக் கேட்ட அந்த டீச்சரை யாருக்குத்தான் பிடிக்காது?!

53250 11321 -

விஜய்க்கு ஸ்கூல் படிக்கும்போதே நிறைய காதல் வந்திருக்கிறது. ஒருமுறை வாத்தியார் எழுப்பிக் கேள்வி கேட்கும்போது, விஜய் பதில் தெரியாமல் திருதிருவென முழிக்க, அப்பொழுது விஜய்க்கு ஃபார்முலா சொல்லி உதவிய பெண்ணைக் காதலித்திருக்கிறார். ஒருநாள் சிட்டி பஸ்ஸில் ஸ்கூலுக்குப் போகும்போது, விஜய்யைப் பார்த்து ஒரு பெண் நீண்டநேரம் சிரித்துக் கொண்டிருக்க விஜய்க்கு மனசு றெக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்துவிட்டது. பின்பு, அந்தப் பெண்ணுக்காகவே அதே பஸ்ஸில் தினந்தோறும் செல்ல ஆரம்பித்தாராம் விஜய். சில நாள்கள் கழித்து அந்தப் பெண் வராமல் போகவே, அந்தக் காதலைத் தொடராமல் விட்டுவிட்டார், விஜய்.

விஜய்யின் பள்ளிப் பருவத்தில் ரேங்க் ஷீட்டில் மார்க் குறையும்போது, குற்ற உணர்ச்சியுடன் தனது தந்தை முன் தலை கவிழ்ந்து நிற்பார், விஜய். இவர் அப்படி நிற்பது அம்மா ஷோபாவுக்குப் பிடிக்காது. `ஏன் கொலை பண்ணிட்ட மாதிரி நிற்கிற… இனிமே இப்படிப் பண்ணமாட்டேன்பானு சொல்லிட்டுப் போ’ என்பாராம், ஷோபா.

53223 10374 -விஜய்க்குச் சிறுவயதிலிருந்தே ஊசிமீது பயம். ஒருமுறை படிக்கட்டிலிருந்து உருண்டு விழுந்துவிட்டார், விஜய். முகமெல்லாம் அடி. ஷோபா கதறி அழ, எஸ்.ஏ.சி பதற்றமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். `ஊசி போடணும்’ என டாக்டர் சொல்ல, விஜய் அழ ஆரம்பித்து, வீடுவரை அழுது புரண்டிருக்கிறார்.

விஜய்யின் ஃபேவரைட் லிஸ்டில் கார்களுக்கு தனி இடம் உண்டு. சிறுவயதில், சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்ட மறுநிமிடம் விஜய் கை காட்டிய பொருள் பைக். `நீ தம்மாத்துண்டு சைக்கிளையே ஃபிளைட் மாதிரி ஓட்டுற, பைக் வாங்கிக் கொடுத்தா ராக்கெட் மாதிரில பறப்ப! உனக்குக் கண்டிப்பா பைக் வாங்கித்தர முடியாது’ என மறுத்துவிட்டார், எஸ்.ஏ.சி. அந்த நிமிடமே விஜய்க்கு பைக் மீதான ஆசை விட்டுப்போயிடுச்சு.

எஸ்.ஏ.சி பைக் ஆசையை நிராகரித்ததும் ஆரம்பித்ததுதான், கார்கள் மீதான காதல். `படையப்பா’ படத்தில் ரம்யா கிருஷ்ணன் பயன்படுத்திய சியாரா வகை கார்தான் விஜய் வாங்கிய முதல் கார். தமிழ்நாட்டில் சியாரா வகை கார்களை வாங்கிய முதல் பத்துப் பேரில் விஜய் ஒருவர். மேலும், கறுப்பு நிற கார்கள்தாம் விஜய்க்குப் பிடிக்கும்.

40817 10097 -விஜய் சினிமாவுக்கு வருகிறேன் எனச் சொன்னபோது, `உனக்கு இந்த ஃபீல்டு வேண்டாம். தாக்குப்பிடிக்கிறது கஷ்டம்’ என்று எஸ்.ஏ.சி எச்சரித்தபோது, அம்மா ஷோபாதான் விஜய்க்கு ஆதரவாகப் பேசி எஸ்.ஏ.சியைச் சமாதானம் செய்தார். இந்தச் சம்பவம் குறித்து விஜய் பேசும்போதெல்லாம், `அந்த நிமிடம் அம்மா மட்டும் இல்லாவிட்டால், நான் நிச்சயம் நடிகர் ஆகியிருக்க முடியாது. என் எல்லா வெற்றிகளும் என் அம்மாவைத்தான் சேரும்’ என நெகிழ்ச்சியாகக் குறிப்பிடுவார்.

`நாளைய தீர்ப்பு’ படத்தின் முதல் காட்சியில் தனது அம்மா ஶ்ரீவித்யாவை அடிக்கும் ராதாரவியை எதிர்த்து `பன்ச்’ பேசவேண்டும். இந்தக் காட்சியை நான்கு முறை ரிகர்சல் பார்த்த விஜய், ஒரே டேக்கில் நடித்துக் கொடுத்தார். இதைப்பார்த்த ராதாரவி விஜய்யைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு, எஸ்.ஏ.சியிடம் `சேகர் உன்பிள்ளை பாஸாயிட்டான்ப்பா…பெரிய நடிகனாயிடுவான்… அப்போ, நான் கால்ஷீட் கேட்டு வருவேன். நீ தரணும்’ என மனதாரப் பாராட்டினாராம். தற்போது முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் படத்தில் ராதாரவி இருக்கிறார்.

`செந்தூரப்பாண்டி’ படத்தின் படப்பிடிப்பின்போது விஜய் ஒரு கண்ணாடியை மோதி உடைக்கிற மாதிரி சீன் இருந்தது. `டூப் போட்டுக்கலாம்’ என அனைவரும் சொல்ல, பிடிவாதமாக விஜய்யே செய்து முடித்திருக்கிறார். இந்தக் காட்சி முடிந்ததும், விஜயகாந்த் கூப்பிட, பாராட்டத்தான் கூப்பிடுகிறார் என நினைத்துப் போனார், விஜய். ஆனால், விஜய்யைத் திட்டிவிட்டு `ஸ்டன்ட் ஆட்கள் அதையே தொழிலாக வெச்சிருக்கிறவங்க. அவங்களுக்கு இருக்கிற கவனமும் நேர்த்தியும் நமக்கு வராது. சின்னக் கண்ணாடி பீஸ் கண்ணுக்குள்ள போனாலும் நடிகனை நம்பி பணம் போட்டவங்க நிலைமை என்னாகும்? நடிகனுக்கு உடம்புதான் மூலதனம்’ எனக் கடிந்துகொண்டார், விஜயகாந்த்.

விஜய்

விஜய் சாதாரணமாக ஏதாவது ஒரு பாடலை `ஹம்’ செய்துகொண்டிருப்பார். விஜய் சங்கீதப் பயிற்சியெல்லாம் பெற்றது கிடையாது. அத்தனையும் கேள்வி ஞானம்தான். `ரசிகன்’ படத்தின் சாங் ரெக்கார்டிங்கில் தேவா மற்றும் எஸ்.ஏ.சி ரொம்ப என்கரேஜ் செய்து விஜய்யை `பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி’ பாடலைப் பாடச் சொல்ல, விஜய் எவ்வளவோ மறுத்துப் பார்த்தார். தேவா விடவில்லை. `நம்ம படம்தானே பாடுங்க. நல்லாயில்லைனா மாத்திக்கலாம்’ எனச் சொல்லி விஜய்யைப் பாட வைத்திருக்கிறார்.

விஜய் டான்ஸ் ஆடிய முதல் படம் `சட்டம் ஒரு விளையாட்டு’. டான்ஸ் மாஸ்டர் டி.கே.பாபு இரண்டு மூன்று முறை சொல்லிக்கொடுத்தும் விஜய் சரியாக ஆடவில்லை. உடனே கோபத்தில், `உன்னையெல்லாம் யார் நடிக்கக் கூப்பிட்டா?’ எனத் திட்டிவிட்டாராம். பின்னாளில், `ரசிகன்’ படத்துக்கும் பாபுதான் டான்ஸ் மாஸ்டர். அந்தப் படத்தில் அவர் சொல்லிக்கொடுத்ததைவிட விஜய் நன்றாக ஆட, `நீ ஒரு பெரிய நடிகனா வருவ! உனக்குப் பெரிய எதிர்காலம் இருக்கு’ எனப் பாராட்டினாராம்.

ஒருகாலத்தில் விஜய் கடுப்படிக்கிற காஸ்டியூம்களைத்தான் போடுவார். லயோலா காலேஜில் படித்த நாள்களிலும்கூட சுமாரான காஸ்ட்யூமில்தான் செல்வார். சினிமாவுக்கு வந்த பிறகும்கூட நன்றாக டிரெஸ் செய்யலாம் என விஜய் யோசித்ததே கிடையாது. விஜய் சங்கீதாவைத் திருமணம் செய்தபிறகுதான் டிரெஸ்ஸிங் சென்ஸில் மாற்றம் நடந்தது. அன்றிலிருந்து இன்றுவரை விஜய்யின் காஸ்டியூம்களைப் பெரும்பாலான மக்கள் ரசிக்கக் காரணம், விஜய் மனைவி சங்கீதா.

`மதுர’ படத்தில் காய்கறிக்காரராக நடித்தபோது விஜய்க்குக் கோயம்பேடு காய்கறி மார்கெட்டைச் சுற்றிப்பார்க்க ஆசை. ஒருநாள் திடீர் விசிட்டாகக் கோயம்பேடுக்கு விஜய் சென்றுவிட, பத்தே நிமிடங்களில் மொத்த மார்க்கெட்டும் விஜய்யைச் சூழ்ந்து கொண்டது. ஒரு கடைக்குச் சென்று வியாபாரம் பார்க்க ஆரம்பித்தார் விஜய். அப்போது, விஜய் கையில் ஐம்பது ரூபாயைத் திணித்த ஒருவர், `வெச்சுக்கோ தலைவா. என்னால கோடி ரூபாய் கொடுக்கமுடியாது. இது நான் உழைச்ச காசு’ என உணர்ச்சிவசப்பட, `ஹலோ பிரதர், இது நீங்க உழைச்ச காசு. வீட்ல கொண்டுபோய் கொடுங்க. இல்லேன்னா, அக்கா என்னைத் திட்டப் போறாங்க’ எனச் சொல்லியிருக்கிறார், விஜய்.

10315 10207 -

`சந்திரமுகி’ படத்தின் வெற்றி விழாவுக்கு ரஜினியின் அழைப்பை ஏற்று கலந்துகொண்டார், விஜய். அப்போது அங்கிருந்த பிரபுவிடம், `தன்னை மேடையில் பேசச் சொல்லவேண்டாம்’ என வேண்டுகோள் வைத்தார். பின்பு ரஜினியே, `விஜய், நீங்க கண்டிப்பாப் பேசணும்’ என வற்புறுத்த, வேறுவழியில்லாமல் மேடையேறிய விஜய், `என் தலைவர் ஃபங்ஷன் இது. தலைவர் சொல்றதைத்தான் செய்வார். செய்றதைத்தான் சொல்வார். அதற்கு இந்த விழாவே சாட்சி. இந்தப் படத்துக்கு வெற்றிவிழா கொண்டாடுவேன்னு சொன்னார், இப்போ செய்றார்!’ என்றார், விஜய்.

விஜய்க்கு பெர்சனலாக 2005- ம் வருடம் மறக்க முடியாதது. விஜய்க்கு மகள் பிறந்த வருடம் இது. தன் மகளைப் பற்றி பேசும்போது, `திவ்யா மேடம் வீட்டையே மொத்தமா தன் பக்கம் திருப்பிக்கிட்டாங்க. ஒரு நாள் முழுக்க வேலை பார்த்து எவ்வளவு களைப்பா வீட்டுக்குள்ள நுழைஞ்சாலும், என் குட்டிப் பொண்ணோட ஒரு சிரிப்பைப் பார்த்துட்டா போதும். உடம்புல புதுசா ரத்தம் பாயும். இது ஏதோ எனக்கு மட்டும் கிடைக்கிற ஃபீலிங் இல்லீங்க… குழந்தை இருக்கிற எல்லார் வீட்டிலேயும் இந்தப் புது ரத்தம் நிச்சயம் பாயும்’ எனச் சொல்லி சிலாகித்தார், பாசக்கார அப்பா விஜய்.

`சிவகாசி’ பட ரிலீஸ் சமயத்தில் தீபாவளி காட்சிக்காக ஒரு ஞாயிற்றுக்கிழமையில் சிவகாசிக்குச் சென்றார், விஜய். அங்கிருக்கும் பட்டாசு ஆலைகளுக்குச் சென்றவர், அங்கே வேலை செய்யும் தொழிலாளிகளிடம் நீண்டநேரம் பேசினார். அப்போது, `நான் நடிச்ச படங்களைப் பார்த்திருக்கிங்களா?’ என ஓர் அம்மாவிடம் கேட்க, `என் பேரன் வீட்ல உம் படத்தைத் தவிர வேறெதும் வைக்க விடமாட்றான். ஒன்ன மாதிரியே ஆடுறான், பாடுறான். நீயும் நல்லாத்தான் நடிக்கிற, நல்லாயிரு!’ என நெகிழ்ந்திருக்கிறார், அந்த அம்மா. அந்த வருட தீபாவளியை அங்கேயே கொண்டாடினார், விஜய்.

விஜய் நடிக்க வந்த புதிதில் விஜய்யின் ஒவ்வோர் அசைவையும் அப்பா எஸ்.ஏ.சிதான் முடிவு செய்வார். காலங்கள் மாற, விஜய்யின் முழு வேலைகளையும் விஜய்யே பார்க்க ஆரம்பித்தார். ஒருநாள் விஜய்க்கு கால் செய்த எஸ்.ஏ.சி, `நான் பெங்களூர்ல இருக்கேன் விஜய். அப்பாவா பேசலை, ஒரு புரொடியூசரா பேசுறேன். `அத்தன் ஒக்கடு’னு ஒரு தெலுங்குப் படம் பார்த்தேன். அதை தமிழில் தயாரிக்கலாம்னு நினைக்கிறேன். உங்க கால்ஷீட் கிடைக்குமா?’ எனக் கேட்டிருக்கிறார். உடனே அப்பாவிடம் விளையாட ஆசைப்பட்ட விஜய், `படம் பார்க்காம, கதை கேட்காம நான் எப்படி கால்ஷீட் தரமுடியும்’ எனச் சொல்ல, பின்பு படத்தைப் பார்த்துவிட்டு அப்பாவுக்கு போன் செய்த விஜய், `புரொடியூசர் சார். நான் ரெடி சார்’ எனச் சொல்ல, அப்படி உருவானதுதான் `ஆதி’ திரைப்படம்.

128481 thumb -

`விஜய்யும் அஜீத்தும் எதிரும் புதிருமா இருக்காங்க’னு கோடம்பாக்கத்தில் பேசிக்கொண்டிருந்த காலம். அந்தப் பேச்சுகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக `திருப்பதி’ பட பூஜை விழாவில் அஜித்தும் ஷாலினியும் நின்று கொண்டிருக்க, சர்பிரைஸாக அங்கு என்ட்ரி கொடுத்தார் விஜய். ஷாலினிக்கு ஒரு `ஹாய்’ சொல்லிவிட்டு `ஆல் தி பெஸ்ட்’ என அஜீத்திடம் சொன்னார். உடனே புன்னகையுடன் அஜீத், `தேங்க்ஸ்’ எனச் சொல்ல, அஜீத்துடன் கட்டியணைத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் விஜய். இன்று இந்த நிகழ்வு நமக்குச் சாதரணமாகத் தெரியலாம். ஆனால், அன்று இந்த நிகழ்வு பெரும்பாலானவர்களுக்கு ஆச்சர்யம்.

சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் தன் 35-வது பிறந்தநாள் விழாவில், ரசிகர் மன்றக் கொடியை அறிமுகப்படுத்தினார், விஜய். விழாவின் இறுதியாக மேடையேறிய விஜய், `எல்லோருக்கும் நான் பொதுவானவனாக இருக்க ஆசைப்படுறேன். ஆனாலும், உங்க வேண்டுகோளுக்காக மன்றக் கொடியை அறிமுகப்படுத்துறேன். அரசியல்ல இருந்துட்டுதான் நல்ல காரியம் பண்ணணும்னு கிடையாது. நல்ல எண்ணம் இருந்தாலே போதும். அந்த எண்ணம் என் ரசிகர்களுக்கு நிறையவே இருக்கு. அதோட சேர்த்து நூறு சதவிகித உழைப்பையும் கொடுத்தோம்னா, வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்’ என்று பேசினார்.

கிராமத்துக்குச் சென்று ஒருநாள் முழுக்க அந்த ஜனங்களோட அவங்க மாதிரி வாழணும் என்பது விஜய்க்கு நீண்ட நாள்களாக ஆசை. திருவள்ளூர் மாவட்டம் நேமம் கிராமத்துக்கு `ஒருநாள் விவசாயி’யாக இருந்துவிட்டுத் திரும்புவோம் என விரும்பினார், விஜய். சிட்டி பையனான விஜய், அக்மார்க் கிராமத்துப் பையனாக வயலில் அத்தனை வேலைகளையும் பார்த்தது, நேமம் கிராமத்து மக்களுக்கு ஆச்சர்யம். `நமக்கு சாப்பாடு கொடுக்கிற விவசாயிகள் கடவுள் மாதிரி’ என விஜய் சொல்ல, அந்தக் கிராமமே நெகிழ்ந்து போனது.

`போக்கிரி’ வெள்ளி விழா மேடையில், `தாம்தக்க…’ பாடலுக்கு மாற்றுத்திறனாளி இளைஞர்களோடு நடனமாடிக்கொண்டிருக்க, ராகவா லாரன்ஸ் அதைப் பாதியிலேயே நிறுத்தி, `விஜய் பிரமாதமான டான்ஸர்னு எல்லோருக்கும் தெரியும். மேடைகளில் பாடியிருக்கார். ஆனா, அவர் இதுவரை எந்த விழா மேடையிலும் ஆடியதில்லை. யாருக்காக இல்லாவிட்டாலும் இந்தப் பசங்களுக்காக அவர் மேடையேறி ஆடணும்’ என வேண்டுகோள் வைக்க, அந்தக் குழந்தைகளுக்காக அதிரடி ஆட்டம் போட்டார்.

நடிக்க வந்த புதிதில் விஜய்க்கு டைரக்‌ஷன் மீதும் மிகப்பெரிய ஆர்வம் இருந்தது. சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கும்போதே கதைக்கான ஹோம் வொர்க்கையும் செய்துகொண்டிருந்தார். `என் முதல் படம் முழு ஆக்‌ஷன் கதையாக இருக்கும்’ என அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பாராம், விஜய். சில வருடங்களுக்கு முன்பு, `உங்க டைரக்டர் ஆசை என்னாச்சு?’ என விஜய்யிடம் கேட்டபோது, ‘ஒரு படம் டைரக்ட் பண்ணணும்னு ஆசை இருந்தது. ஆனா, இப்போ இல்லை. அது ரொம்ப தலைவலியான வேலைங்க, நமக்கு செட் ஆகாது. நடிப்பே போதும்!’ என்றார், விஜய்.

மகன் சஞ்சய் பிறந்தது முதல் நீண்ட நாள்களாக மீடியா கண்ணில்படாமல் பாதுகாத்து வந்தார், விஜய். கிரவுண்டில் டோனியைப் பார்க்க வேண்டும் என்ற மகனின் ஆசைக்காக, 2008- ம் ஆண்டு ஐபிஎல் போட்டியின்போது மைதானத்துக்குச் சஞ்சயை அழைத்து வந்தார். அங்கே, `கிரிக்கெட் ஆடத் தெரியுமா?’ என்று டோனி கேட்க, உற்சாகமாகத் தலையாட்டினார், சஞ்சய். அப்போது, டோனி ஹை டெஸிபல் விசில் அடிக்க, `நீயும் விசில் அடிப்பா’ என்று தன் பாக்கெட்டில் இருந்த விசிலை எடுத்து சஞ்சய் கொடுக்க, விசில் அடித்துக் குஷிபடுத்தினார் விஜய்.

சினிமா, டான்ஸுக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாதவர், சஞ்சய். `வேட்டைக்காரன்’ படத்தின் அறிமுகப் பாடலில் ஆட ஸ்பாட்டுக்கு வந்தார், சஞ்சய். டான்ஸ் மாஸ்டர் ஷோபி சொல்லித்தரும் ஸ்டெப்பை கூர்ந்து கவனித்தார். எந்த ரிகர்சலும் இல்லாமல் ஆடத் தொடங்கினார். சஞ்சயின் ஆட்டம் விஜய்க்கே சர்பிரைஸ்தான்.

விஜய் ரஜினியின் வெறித்தனமான ரசிகர்தான். ஆனால், ரஜினிமீது கொண்ட அதே அன்பு மற்றொரு நடிகர் மீதும் கொண்டிருந்தார். அவர், அமிதாப் பச்சன். `ஷோலே’ படத்திலிருந்து அமிதாப்பின் விசிறியானவர், விஜய். எந்தளவுக்கு என்றால், அப்பா -அம்மாவுக்குப் பிறகு அவருக்கு மிகவும் பிடித்த ஜோடி அமிதாப் – ஜெயமாதுரிதான்.

விஜய்

விஜய்க்குக் கல்லூரி காலத்திலிருந்து இன்றுவரை சஞ்சீவ், ஶ்ரீநாத், மனோஜ், சுஜய், ராம்குமார்… இந்த ஐந்து பேர்தான் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். இவர்களோடு இருக்கும்போது நீங்கள் ரியல் விஜய்யைப் பார்க்க முடியும். `கலகல’வென சிரித்துப் பேசுவது, காமெடி, மிமிக்ரி செய்வது என ஏரியாவே களை கட்டும். நமக்கு விஜய், அம்மாவுக்கு ஜோ, நெருங்கிய நண்பர்களுக்கு விஜய் `மாப்பு’தான். கல்லூரி காலத்தில் விழா ஒன்றில் விஜய் தனது நண்பர்களுடன் `கொண்டையில் தாழம்பூ’ பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார். மேலும், இந்த ஐந்து பேரில் யார் வீட்டில் விஷேசம் நடந்தாலும், குடும்பத்தோடு கூடிவிடுவார்கள்.

விஜய்க்கு நெகட்டிவ் கேரக்டர்களில் நடிக்க மிகுந்த ஆர்வம் உண்டு. அப்படி விஜய் மிகவும் விருப்பப்பட்டு நடித்த `பிரியமுடன்’ படத்தைப் பார்த்த ஷோபா, `இனிமேல் இந்தமாதிரி கேரக்டர்ல நடிக்காதப்பா’ எனச் சொன்னார்களாம். அம்மாவின் அன்புக்காக, விஜய் நெகட்டிவ் கேரக்டர்களில் நடிப்பதில்லை.

விஜய்க்கு என்ன ஆசைகள் இருக்கப்போகிறது… கேட்டால், அதிர்ச்சி ஆகிவிடுவீர்கள். ரங்கநாதன் தெருவில் கூட்ட நெரிசலில் ஷாப்பிங் செய்யவேண்டும். மனைவியை பைக்கில் ஏற்றிக்கொண்டு, சிட்டியை ரவுண்ட் அடிக்கவேண்டும். இன்னும் பல ஆசைகள் விஜய்க்கு உண்டு.

விஜய்க்கு மோகன்லால் மீது மிகுந்த மரியாதை உண்டு. ஒருநாள் மோகன்லால் குடும்பத்தை தன் வீட்டுக்கு வரவழைத்துப் பிரியாணி விருந்து கொடுத்தார், விஜய். இது நடந்தபிறகு விஜய் குடும்பத்தை, தன் ஈ.சி.ஆர் வீட்டுக்கு அழைத்து கேரள ஸ்டைல் விருந்து கொடுத்தார் மோகன்லால். மோகன்லால் வீடு முழுக்க ஓவியங்களாக இருப்பதைக் கண்ட விஜய், அந்த ஓவியங்களையெல்லாம் மோகன்லால்தான் வரைந்தார் என்பதை அறிந்தவுடன் மிகவும் ஆச்சர்யப்பட்டார். விருந்தெல்லாம் முடிந்தபிறகு தான் வரைந்த ஆறடி உயர விஜய் ஓவியத்தை பரிசாக விஜய்க்குக் கொடுத்தார், மோகன்லால்.

`போக்கிரி’ படத்தில் வரும் `வசந்த முல்லை’ பாடலுக்காக விஜய், ராஜா வேடம் போட்டிருப்பார். அப்பா ராஜா வேடம் போட்டிருப்பதை அறிந்த சஞ்சய்க்கு விஜய்யை அந்த வேடத்தில் காணவேண்டும் என ஆசை. மகனின் ஆசைக்காக சஞ்சயை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரவழைத்து, ஆசைதீர போட்டோஸ் எடுத்துக்கொண்டார்.

`ஆதி’ படத்தை அவசரமா முடிக்க வேண்டிய கட்டாயத்தால், ராத்திரி பகல் எனப் பார்க்காமல் விஜய் ஹைதராபாத்தில் ஷூட்டிங்கில் மூழ்கியிருந்த சமயம். வீட்டில் டிவியில் விஜய் படப் பாடல் ஓடிக்கொண்டிருக்க, சஞ்சய் தன் தங்கச்சி திவ்யாவிடம், `என்ன பார்க்கிறே பாப்பா, அதோ டான்ஸ் ஆடுறாரே, அவர் யாருனு பார்க்குறியா? நம்ம வீட்டுக்குக்கூட அப்பப்போ வந்துட்டுப் போவாரே, அவர்தான். அவர் வந்ததும் உனக்குக் காட்டுறேன்’ எனச் சொல்லியிருக்கார். இதைக் கவனித்த சங்கீதா மொபைலில் விஜய்யிடம் சொல்ல, மனிதர் ஆடிப்போய்விட்டார். உடனே முதல் வேலையாக, `அடுத்த சண்டே எல்லோரும் கிளம்பி ஹைதராபாத் வந்துடுங்க’ என ஃப்ளைட் டிக்கெட் எடுத்து குடும்பத்தை வரவழைத்தார், விஜய்.

விஜய் சிலகாலங்களில் திமுகவுடன் நட்புக்கொடி பாராட்டியிருக்கிறார். மு.க.ஸ்டாலின் மேயராக இருந்த சமயம், அவரைச் சந்தித்துப் பொதுமக்களுக்கென அரிசி மூட்டைகளை அன்பளிப்பாகக் கொடுத்தார், விஜய். பிறகு, `நான் சினிமா தயாரிச்சா, விஜய்யை வெச்சுத்தான் என் முதல் படத்தை எடுப்பேன்!’ என்று சொல்லி, `குருவி’ படத்தைத் தயாரித்தார், உதயநிதி. பின்பு, ஒரு நிகழ்ச்சியில், `முதல்வர் குடும்பத்து வாரிசுகளான உதயநிதி, தயாநிதி, அருள்நிதி பெயர்களை உச்சரித்தாலே ஒரு வைப்ரேஷன் ஏற்படுகிறது. அந்த அளவுக்கு அற்புதமான தமிழ்ப் பெயர்கள்!’ என்று கருணாநிதி முன்னிலையில் புகழாரம் சூட்டினார், விஜய்.

விஜய் ஜெயலிதாவை நேருக்கு நேர் சந்தித்துப் பேசியது சைதை துரைசாமி இல்லத் திருமண விழாவில்தான். ஜெயலலிதா மணமக்களைப் பார்த்துவிட்டு திரும்பும்போது, விஜய் தம்பதிகளை வாழ்த்த படியேறிக்கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக இருவரும் சந்திக்க, அவ்வளவு கூட்ட நெரிசலிலும் விஜய்க்காகச் சில நிமிடங்கள் ஒதுக்கினார், ஜெயலலிதா.

விஜய் எப்போதும் பேப்பரைப் பின்பக்கத்தில் இருந்துதான் புரட்டுவார். தன் பட விளம்பரங்கள் மற்றும் சினிமா உலகம் பத்தி என்ன செய்திகள் என தன் சப்ஜெக்ட்டை மட்டும் பார்த்துட்டு, கசங்காமல் பேப்பரை மூடி வைத்துவிடுவார், விஜய். ஒருமுறை, `ஏம்ப்பா முதல் பக்கத்திலிருந்து படிக்காம கடைசியிலிருந்து படிக்கிற?’ என அப்பா கேட்க, `முதல் பக்க நியூஸ்ல வர்ற அளவுக்கு உங்க பையன் இன்னும் பெரிய ஆள் ஆகலைப்பா’ என கடி ஜோக் அடித்துவிட்டு நகர்ந்துவிடுவார்.

`இயக்குநர்களின் நடிகர்’னா அது விஜய்தான் என்பார்கள், இவருடன் பணியாற்றிய இயக்குநர்கள். ஒரு கதையை முடிவு செய்யத்தான் நேரம் எடுத்துக்கொள்வாரே தவிர, ஷூட்டிங் ஸ்பாடுக்கு வந்துவிட்டால், சமத்துப் பிள்ளையாக மாறிவிடுவார். `துப்பாக்கி’ பட ஷூட்டிங் சமயத்தில் முருகதாஸிடம் சென்ற விஜய், `சார்… பிரபுதேவா அவர் படத்துல ஒரு பாட்டுக்கு ஆடக் கூப்பிட்டார். போயிட்டு வரவா?’ எனக் கேட்க, `தாராளமா போங்க’ என அனுப்பி வைத்திருக்கிறார், முருகதாஸ்.

இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்தபோது, `இலங்கையில் அமைதியை நிலைநாட்டுங்கள். அப்பாவித் தமிழர்களைக் கொல்லாதீர்கள்’ என்று தமிழில், ஆங்கிலம், இந்தியில் சொல்லியும் ராஜபக்சே காதில் விழவில்லை. முதல் முறையாக சிங்கள மொழியில் பேசி, இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுவித்தார், விஜய்.

விஜய்க்குத் திருமணம் நிச்சயம் செய்தவுடனே எஸ்.ஏ.சி செய்த முதல் காரியம் விஜய்க்குத் தனிக்குடித்தனம் வைக்க வீடு பார்த்ததுதான். `எதுக்குப்பா இதெல்லாம்… நாங்க உங்களோடுதான் இருப்போம்’னு விஜய் சொன்னதற்கு, `அமைதியா இரு ..உனக்கு எதுவும் புரியாது’னு பதிலளித்துள்ளார் எஸ்.ஏ.சி.அப்பொழுது ஏன் அப்பா இப்படிச் செய்கிறார் எனப் புரியாமல் தவித்த விஜய் பின்னாளில், குடும்பம் நடத்துவதில் எத்தனை பொறுப்பு ,கஷ்ட நஷ்டம் இருக்கும் என்பதனை புரியவைக்கதான் அப்பா இப்படிச் செய்தார் என்பதனை புரிந்து கொண்டார்.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here