அமெரிக்காவில் 24 மணி நேரத்துக்குள் பைசர் கொரோனா தடுப்பு மருந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும் அந்நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஊஹான் மாகாணத்தில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இந்த ஒருவருடமாக உலகை அதிரவைத்துவருகிறது. கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் இந்த ஒரு வருடமாக முடங்கியுள்ளது. உலகின் அனைத்து நாடுகளும் கொரோனாவால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவால் கணக்கிட முடியாத அளவு இழப்புகளைக் கண்டுள்ளன. உலக அளவில் கொரோனா வைரஸால் 7,15,03,497 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில், 16,02,509 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 1,62,95,714 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 லட்சத்துக்கு அதிகமானோர் உயிரிழதுள்ளனர். இந்தநிலையில், உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்தநிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பைசர் நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக கண்டறியப்பட்டது. அதனையடுத்து, முதல் நாடாக இங்கிலாந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் பைசர் தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தியது. இந்தநிலையில், அமெரிக்காவும் பைசர் தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதற்கு ஒப்புதல் அளித்தது. ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்காவின் உணவு, மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு ஒப்புதல் அளித்தது.
ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு கொண்டுவர ஆதரவாக நிபுணர் குழு உறுப்பினர்களில் 17 பேரும், எதிராக 4 பேரும் வாக்களித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த தடுப்பூசியை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய ஒவ்வாமை குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுமாறு, உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, ஃபைசர் நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த மருந்தை கர்ப்பிணிகள் பயன்படுத்தலாமா என்பது குறித்த தெளிவான தகவல் இல்லை என்பதையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
கனடா,பிரிட்டன், பஹ்ரைன் நாடுகளை தொடர்ந்து ஃபைசர் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த நாடுகளின் பட்டியலில் நான்காவது நாடாக அமெரிக்கா இடம்பெற்றுள்ளது. இந்தநிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் பைசர் கொரோனா தடுப்பு மருந்து மக்கள் பயன்பாட்டு வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான அவருடைய ட்விட்டர் பதிவில், ‘அமெரிக்காவில் பைசர் கொரோனா தடுப்பு மருந்து அடுத்த 24 மணி நேரத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும். ஃபெடெக்ஸ் மற்றும் யுபிஎஸ் நிறுவனங்கள் மூலம், நாட்டிலுள்ள ஒவ்வொரு மாகாணத்துக்கும் கொரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பும் முயற்சியைத் தொடங்கியுள்ளோம். சுகாதாரப் பணியாளர்களும், மூத்த குடிமக்களும் முதலில் கொரோனா தடுப்பு மருந்துகளைப் போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இதன் மூலம் கொரோனாவினால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்க்கலாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்