அமெரிக்க ஜனாதிபதி பெறுபேறுகள் தொடர்பாக ஜோ பைடன் 284 ஆசனங்களை பெற்ற நிலையில் நான்கு நாட்களாக ஏற்பட்ட இழுபறி நிலை முடிவிற்கு வந்துள்ளது.தெரிவான புதிய ஜனாதிபதி ஜோ பைடன் தமது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில், மக்கள் என்மீது வைத்த நம்பிக்கையினை நிச்சயமாக காப்பாற்றுவேன்.உலக அரங்கில் அமெரிக்காவின் மரியாதையை உயர்த்துவதற்கு சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு முன்னுரிமை வழங்கப்படும்.அமெரிக்காவில் ஒவ்வொருவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதே தனது இலக்கு என குறிப்பிட்ட அவர் இதனை அமுல் படுத்த சகல தரப்பினரும் ஒன்றிணைந்து ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.எமக்கு எதிராக செயல்பட்டவர்களை பகையாளியாக கணிக்க வேண்டாம் என வேண்டிக்கொண்ட அவர், அமெரிக்காவின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா ஆட்சியை கையேற்ற போது அவருடன் தான் இணைந்து அமெரிக்காவின் மேன்மைக்காக செயல்பட்டேன்.அனைத்து அமெரிக்க மக்களுக்கும் ஜனாதிபதியாகவும் நேர்மையாகவும் செயல்படுவேன் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.தேர்தலில் தோல்வியடைந்துள்ள டொனால்ட் ட்ரம்ப் இதுவரை மக்கள் முன்னிலையில் எந்தவிதமான கருத்தினையும் வெளியிடவில்லை.மாறாக அவர் கொல்ப் விளையாட்டில் ஈடுபட்டு வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் 30 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு முறை மட்டுமே ஜனாதிபதியாக பதவி வகித்த ஒருவராக டொனால்ட் ட்ரம்ப் விளங்குகிறார்.தோல்வியடைந்த டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் தமது சீற்றத்தை வெளிப்படுத்தி சில நகரங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், வன் செயல் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை.இதுவரை வெளியான பெறுபேறுகளின் படி ஜோ பைடனுக்கு 7 கோடியே 40 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
தேர்தல் பிரசாரத்தின் போது, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2 லட்சத்து 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் மரணிப்பதை தடுக்க டொனால்ட் ட்ரம்ப் தவறியுள்ளமை ஜோ பைடனினால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.அதேவேளை, ஜோ டைனினால் அறிமுகப்படுத்தப்பட்ட கமலா ஹரிஸ் முதலாவது உப ஜனாதிபதியாக தெரிவான முதலாவது பெண்மணி என சரித்திரம் படைத்துள்ளார்.அத்துடன் முதலாவது கறுப்பு இன ஆசிய அமெரிக்க உப ஜனாதிபதியாகவும் தெரிவாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.